தன்னை கொல்ல கூலிப்படை; முதல்வர் மகன் மீது சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு.!

கடந்த 1966ம் ஆண்டு பால் தாக்கரேவால் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது மகன் உத்தவ் தாக்கரே கட்சியை வழிநடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 2019 மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரே போட்டியிட்டது.

இதில் பாஜக அதிக இடங்களை வெற்றிபெற்ற நிலையில், சிவ சேனா குறைவான இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலையில் பாஜக கூட்டணியில் உத்தவ் தாக்கரே முதல்வராக விரும்பினார். ஆனால் பாஜக மறுக்கவே, எதிர்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரே முதல்வரானார். இந்த கூட்டணி மகா விகாஸ் அகாடி கூட்டணியாக அறியப்பட்டது.

உத்தவ் தாக்கரே முதல்வராக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, கடந்த ஜூன் 2022 இல் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிளவால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேயுடன் சிவசேனாவில் 40 எம்எல்ஏக்கள் சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தனர். சிவசேனா எம்எல்ஏக்கள் குதிரை பேரம் பாஜகவால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது விமர்சகர்களின் கருத்து.

உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இரு அணிகளும் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை உரிமை கோரிய நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு கட்சி மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதற்கு உத்தவ் தாக்கரே தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை கைப்பற்ற 2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளதாகவும், இன்னும் அதிகப்படியான எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் எங்கள் பக்கம் இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தரப்பு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.

இந்தநிலையில் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் கூலிப்படையை பணிக்கு அமர்த்தியதாக எம்பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியதை அடுத்து, அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த குற்றவாளிகளை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறிய உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் ராவத்துக்கு எதிராக தானேயில் சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவசேனா தலைவரும், தானே முன்னாள் மேயருமான மீனாட்சி ஷிண்டேவின் புகாரின் பேரில், பல்வேறு குழுக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை சீர்குழைத்தல், அவதூறு மற்றும் பிற குற்றங்களுக்காக ஒரு நாள் முன்னதாக சஞ்சய் ராவத் மீது கபூர்பாவடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

ஒன்றிய அரசின் திட்டங்கள் சில குடும்பங்களுக்கு மட்டுமே செல்கின்றன; அஸ்ஸாம் முதல்வர் பேச்சு.!

இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, ஷிண்டே குழுவைச் சேர்ந்த மீனாட்சி ஷிண்டே மற்றும் பிற மகளிர் பிரிவு பணியாளர்கள், இங்குள்ள மனநல மருத்துவமனையில் சஞ்சய் ராவத்தை சேர்க்க ஆம்புலன்சில் முகமூடி அணிந்த ஒரு நபரை அவரது முகத்தில் ராவுத்தின் புகைப்படத்துடன் கொண்டு வந்தனர். சஞ்சய் ராவத் “தனது மன சமநிலையை இழந்துவிட்டார், எனவே, நாங்கள் அவருக்கு விரைவான சிகிச்சையை நாடுகிறோம்” என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.