மதுரை: பூத் கமிட்டி அமைப்பதில் மெத்தனம் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல் தலைவர்களுக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் பாஜக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக பேசியதாவது: “இது பாஜகவுக்கு முக்கியான நேரம். தமிழக பாஜக நடவடிக்கையை ஜே.பி.நட்டா கண்காணித்து வருகிறார். பாஜகவை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் முக்கியமான நேரத்தில் உள்ளோம். இதனால் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும்.
இதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்திலும் 5 இடங்களில் தாமரை சின்னம் வரைய வேண்டும். பூத் அளவில் கட்சி நிர்வாகிகளை இணைத்தும், பொது மக்களை சேர்த்தும் வாட்ஸ் அப் குழுக்களை ஏற்படுத்தி மத்திய அரசின் பட்ஜெட், குடியரசுத் தலைவரின் உரையைப் பரப்ப வேண்டும். அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
பூத் கமிட்டி அமைப்பதில் சரியாக செயல்படாத மண்டல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அனைத்து நிர்வாகிகளும் கட்சியின் உத்தரவுகளை சரியாக பின்பற்றி செயல்பட வேண்டும். அண்ணாமலை பாதயாத்திரைக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். திமுகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்னர். முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திமுகவினரின் செயல்களைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும். திமுக முதலில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டது. இப்போது பாஜகவின் வளர்ச்சியை பார்த்து திமுக அதிர்ச்சியடைந்துள்ளது. பிரதமர் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.