பாஜக செய்தி தொடர்பாளர் மீது புகார்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி.!

தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, நேற்று காலை சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் சதாப்தி விரைவு ரயிலில் பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில், சென்னை ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார்.

இந்தநிலையில் ரயிலில் பயணம் செய்தபோது பிரதமர் மோடி குறித்து பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி பெருமையாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் பிரதமர் நாட்டைவிற்றுவிட்டார் என எதிர்கருத்து வைத்துள்ளார். இதை தாங்கிக் கொள்ள முடியாத நாராயணன் திருப்பதி, பொது இடத்தில் பிரதமரை இழிவுபடுத்தி விட்டார் எனவும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் தூக்கிவிடுவேன் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டுக் கொண்டிருந்த சாமுவேல்ராஜ், பயணிக்கு ஆதரவாக பேசவே மோதல் முற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.

இந்தநிலையில் நாராயணன் திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில்வே காவல்துறையிடம் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நேற்று ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சக பயணியர் ஒருவரை பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “தூக்கிவிடுவேன், நான் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்” என்றெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார்.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் நாராயணன் திருப்பதியை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதற்கு பதிலாக ஆளும் கட்சி என்ற அதிகாரத்தையும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பையும் தவறாக பயன்படுத்தி காவல்துறையை ஏவி விட்டு கே. சாமுவேல்ராஜை ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

பாஜகவுக்கு அஞ்சி ரயில்வே போலீஸ் நடந்து கொண்ட விதம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். பொதுவாழ்க்கையில் இருக்கிற யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல ; கருத்து சுதந்திரம், அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள உரிமையாகும். சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்கவே கூடாது.

நெல்லை-திருச்செந்தூர் ரெயில் போக்குவரத்தின் நூற்றாண்டு விழா – பல்வேறு இடங்களில் கொண்டாட்டம்

இந்நிலையில் பிரதமரை விமர்சித்தால் காவல்துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையுமே காட்டுகிறது. இத்தனையும் செய்துவிட்டு கே.சாமுவேல்ராஜ் பேசியதை வெட்டியும், திரித்தும் வெளியிட்டு அவர் குற்றம் செய்து விட்டதைப் போல பொதுவெளியில் பதிவிடுவதை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது.

தென்னக ரயில்வே காவல்துறை, இச்சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீதும், சக பயணிகளை மிரட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.