தென்காசி வழியாக இயக்கப்பட்ட தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் 5 மாதங்களில் ரூ.3.70 கோடி வருவாய்

தென்காசி: தென்காசி வழியாக திருநெல்வேலி- தாம்பரம் மற்றும் தாம்பரம்- திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இயக்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கள் தோறும் இந்த ரயில் இயக்கப்பட்டது.

இதேபோல் தென்காசி வழியாக திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் வியாழக் கிழமைகளிலும், மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிதோறும் கடந்த செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இயக்கப்பட்டது. இந்த வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகளிடம் சிறப்பான வரவேற்பு இருந்தது.

இந்த சிறப்பு ரயில்கள் மூலம் கிடைத்த வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு தெற்கு ரயில்வே அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: ரூ.3.70 கோடி வருவாய்திருநெல்வேலி – தாம்பரம் ரயில் 17,303 பயணிகளுடன் ரூ.1.14 கோடி வருமானமும், தாம்பரம் – திருநெல்வேலி ரயில் 16,214 பயணிகளுடன் ரூ.97.61 லட்சம் வருமானமும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் 15,189 பயணி களுடன் ரூ.69.50 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ரயில் 18,978 பயணிகளுடன் ரூ.86.54 லட்சம் வருமானமும் ஈட்டியுள்ளது.

கடந்த 5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 67,679 பேர் பயணித் ததன் மூலம் ரூ.3.70 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளனர். இதுகுறித்து பாண்டியராஜா கூறும்போது, “இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரயில்வேக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது.

திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ரயில்வேக்கு வருவாய் அள்ளிக் கொடுக்கும் திருநெல்வேலி- தாம்பரம்- திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி ரயில்களை தொடர்ந்து நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிக்கை விவரம்: திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06030) வரும் ஏப்ரல் 6 முதல் முதல் ஜூன் 29 வரை வியாழக் கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06029) ஏப்ரல் 7 முதல் ஜூன் 30 வரை வெள்ளிக் கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி சந்திப்பு, போத்தனுார் சந்திப்பு, கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.