ஊழல் புகார்: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

 புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு 6,000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராகப் பணியாற்றிய குருமீத் சிங், தற்போது புதுவை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்துவருகிறார். இவர்மீது தற்போது டெல்லி பல்கலைக்கழகம் பல்வேறு புகார்களை தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக இவர்மீது சொல்லப்பட்ட அனைத்து புகார்களும் உண்மையாகியிருக்கின்றன. இவரின் தலைமையிலான பல்கலைக்கழக நிர்வாகம் கல்விக்கட்டணத்தை 50 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரை தாறுமாறாக உயர்த்தி ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்பட்டுவருகிறது.  மேலும் கடந்த 20 ஆண்டுகளாக  இயக்கப்பட்ட இலவசப் பேருந்து சேவை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகம் அமைப்பதற்காக காலாப்பட்டில் 760 ஏக்கர் நிலத்தை புதுச்சேரி அரசு இலவசமாக வழங்கியது.

அப்போது இருந்த 21 பிரிவுகளில் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பல்கலைக்கழகம் வழங்கியது. பல்கலைக்கழகத்தில் தற்போது நடத்தப்படும் படிப்புகளின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இவற்றில் 21 படிப்புகளைத் தவிர்த்து, மற்ற 53 படிப்புகளில் உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் பார்த்து வருகிறார். ஏற்கெனவே, இவர்மீது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய பணியாளர் நியமனம், கட்டுமானப் பணி, டெண்டர் முறைகேடு, ஸ்மார்ட் போர்டு வாங்கியதில் ஊழல் என மிகப்பெரும் ஊழல் முறைகேடுகள் தொடர்கின்றன. பதவி காலம் முடிந்த பின்புமும் தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்காக துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்காமல் காலம் தாழ்த்திவருகிறார்.

மேலும் புதுச்சேரி மாணவர்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக, இவர்மீது பல்வேறு புகார்கள் இருந்து வரும் நிலையில்,  தற்போது மத்திய டெல்லி பல்கலைக்கழகமும் முக்கியமான புகார் அளித்திருக்கிறது. அதனால் குருமீத் சிங் உடனடியாக தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். அத்துடன் கடந்த 2017 முதல் இதுவரை நடைபெற்ற கட்டுமானப் பணிகள், புதிய பணி நியமனங்களை முழுமையாக ஆய்வு செய்து, அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி  மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.