திருமலை: ஆந்திர ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரனை முதல்வர் ஜெகன்மோகன் வழி அனுப்பி வைத்து காலில் விழுந்து ஆசி பெற்றார். நாளை புதிய கவர்னர் பதவியேற்க உள்ளார். ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரன் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவரை சட்டீஸ்கர் மாநில கவர்னராக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி விஜயவாடா அமராவதி கன்னாவரம் விமான நிலையத்தில் நேற்று நடந்தது. அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். கவர்னருக்கு முதல்வர் ஜெகன்மோகன் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.
அப்போது முதல்வர் ஜெகன்மோகன், கவர்னரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இவருக்கு பதிலாக ஆந்திர மாநில புதிய கவர்னராக நீதிபதி அப்துல்நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று விஜயவாடா வந்தார். அவரை கன்னாவரம் விமான நிலையத்தில் முதல்வர் ஜெகன்மோகன் வரவேற்றார். நாளை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னராக அப்துல்நசீர் பதவியேற்க உள்ளார். கர்நாடகாவை சேர்ந்த அப்துல்நசீர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றாமல் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 3வது நீதிபதி ஆவார். கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். புதிய ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் நடைபெற்று வருகிறது.