மார்த்தாண்டம்: குமரி காவல் நிலையங்களில் உள்ள போலீசார், தனிபிரிவு போலீசார் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துள்ளதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே புகார்களுக்கு உள்ளானவர்களை கண்காணித்து களையெடுக்க ரகசிய சர்வே எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் என்று 4 சப்-டிவிசன்களில் மொத்தம் 34 காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனிப்பிரிவு ஏட்டு ஒருவர் இருப்பார். அவர் போலீஸ் நிலையத்தில் அன்றாடம் நடக்கும் எப்ஐஆர் பதிவுகள், கஞ்சா, கனிமவள கடத்தல் இப்படியாக காவல் நிலையத்ைத சேர்ந்த போலீசாருக்கே தெரியாத பல ரகசிய தகவல்களை கண்காணிப்பது வழக்கம்.
இதனால் கலவரம் எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறதா? என்று கண்காணித்து முன்கூட்டியே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பார். இந்த தகவல்கள் அனைத்தும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டு நேரடியாக எஸ்பி ஹரிகிரண் பிரசாத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிரச்னையின் தீவிரத்துக்கு ஏற்ப எஸ்பி அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பார். குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் மீது புகார் எழுந்தால்கூட, அது குறித்த தவல்களையும் தனிப்பிரிவு ஏட்டு பதிவு செய்வார். இந்த பதிவுகள் நேரடியாக எஸ்பி கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் புகாருக்கு உள்ளான போலீசார் இடமாற்றம், துறை மாற்றம், சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுகின்றனர்.
இதற்கிடையே போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் ஒருசில போலீசார் மீது கட்டப்பஞ்சாயத்து, கனிமவளங்கள் கடத்தலுக்கு துணைபோகுதல், புகாருக்கு உள்ளான நபர் மீது வழக்குப்பதியாமல் இருக்க லஞ்சம் வாங்குதல் என்று அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. பல வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படாமல், வெளியே போலீசாரால் கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கந்துவட்டி கும்பல், கனிமவளம் கடத்துதல், மணல் கடத்தல், கஞ்சா கும்பல்களுடன் ஒருசில போலீசாருக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்து உள்ளது.
தனிப்பிரிவு ஏட்டுகளுக்கும் இதில் கணிசமான பங்கு கிடைப்பதால் எஸ்பியிடன் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. இருப்பினும் நேர்மையான போலீசாரால் அவ்வப்போது தகவல் எஸ்பியின் காதுகளுக்கு சென்றுவிடுகின்றன. இதுகுறித்து கண்காணித்து வந்த எஸ்பி ஹரிகிரண் பிரசாத் கடந்த 2 வாரத்துக்கு முன்பு நாகர்கோவில் சப்-டிவிசனுக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் தனிப்பிரிவு ஏட்டுகளை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இது தவிர புகாருக்கு உள்ளான காவல் நிலையங்களிலும் தனிப்பிரிவு ஏட்டுகளை களையெடுக்க எஸ்பி திட்டமிட்டு உள்ளார். இதனால் குற்ற செயல்களுக்கு துணைபோகும் ஒருசில போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
* போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் ஒருசில போலீசார் மீது கட்டப்பஞ்சாயத்து, கனிமவளங்கள் கடத்தலுக்கு துணைபோகுதல், புகாருக்கு உள்ளான நபர் மீது வழக்குப்பதியாமல் இருக்க லஞ்சம் வாங்குதல் என்று அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. பல வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படாமல், வெளியே போலீசாரால் கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.