இஸ்லாமாபாத், ‘நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசே காரணம். எங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தான் வேண்டும். அவர் இருந்திருந்தால் தக்காளி உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்திருக்கும்’ என, பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் கூறியுள்ள, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.
கடும் உயர்வு
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெட்ரோல் உட்பட பல பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு நடந்த ஒரு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவர், பிரபல பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் சனா அம்ஜாபுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்திருக்கக் கூடாது. இங்கு அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.
இஸ்லாமிய நாட்டை பெற்றோம். ஆனால், இஸ்லாம் இங்கு வளரவில்லை. இந்தியப் பிரதமர் மோடி தான் சிறந்தவர். அவரை அங்குள்ள மக்கள் மதிக்கின்றனர்.
சிறந்த தலைவர்
நமக்கு நரேந்திர மோடி கிடைத்திருந்தால், நவாஸ் ஷெரீப், பெனசிர் புட்டோ, இம்ரான் கான் போன்ற பிரதமர்கள், பர்வேஸ் முஷாரப் போன்ற அதிபர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள்.
பிரதமர் மோடி இங்கு இருந்திருந்தால், மோசமான சக்திகளை விரட்டிஅடித்திருப்பார். இந்தியா உலகின் ஐந்தாவது பெரும் பொருளாதார நாடாக உள்ளது.
ஆனால், பாகிஸ்தான் எங்கேயோ உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு நாங்கள் தயார். அவர் சிறந்த தலைவர்; சிறந்த மனிதர்.
அவர் மட்டும் இங்கு இருந்திருந்தால், குறைந்த விலையில் தக்காளி, இறைச்சி போன்றவை கிடைத்திருக்கும். எங்களுடைய குழந்தைகள் இரவில் பசியுடன் துாங்க சென்றிருக்க மாட்டார்கள்.
நரேந்திர மோடி இந்த நாட்டையும் ஆள வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்