ஹூப்பள்ளி: கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் மது அருந்திய வாலிபர், பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம் விஜயபூரில் இருந்து மங்களூரு நோக்கி கேஎஸ்ஆர்டிசியின் ஏசி இல்லாத ஸ்லீப்பர் கோச் பேருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பேருந்தில் விஜயப்பூரில் இருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் இருக்கை முன்பதிவு செய்து சென்று கொண்டிருந்தார். அவரின் இருக்கைக்கு அருகில் இருந்த சீட்டில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பயணித்து வந்துள்ளார்.
பேருந்து, சிற்றுண்டிக்காக ஹூப்பள்ளி அருகே உள்ள கிரேசூர் தாபா அருகே நின்றது. இந்த நேரத்தில், பயணிகள் அனைவரும் கீழே இறங்கியபோது, மது அருந்திய வாலிபர் இளம் பெண்ணின் இருக்கையில், சிறுநீர் கழித்துள்ளார். இளம்பெண் மீண்டும் பேருந்துக்கு வந்த போது இதுகுறித்து தெரியவந்தது. இதையடுத்து, டிரைவர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அவரை சரமாரியாக தாக்கி பேருந்தைவிட்டு இறக்கினர். இதனால் பேருந்தில் பயணிக்க முடியாமல் போனதால், அந்த இருக்கைக்கு அருகே இருந்த சுமார் 6 பயணிகள், வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.