விருதுநகர்: மது அருந்த ஆசைப்பட்டு போலீஸில் சிக்கிய சிலை திருடன்! – என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் பள்ளி வளாகத்திலுள்ள கோயிலிலிருந்து வெண்கல சிலையை மர்மநபர் திருடிச் சென்றார். இது தொடர்பான‌ வழக்கில் திருடனே கையும், களவுமாக போலீஸிடம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் விசாரிக்கையில், “ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் நடராஜர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் கருவறையில் இருந்த ஒன்றரை அடி உயரம் உள்ள காரைக்கால் அம்மையாரின் வெண்கலசிலை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், சிலை திருட்டு குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் எங்களிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்து, பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிலை திருடிய மர்மநபர் குறித்து விசாரணை நடத்தினோம்.

வெண்கல சிலை

இந்த நிலையில், வத்திராயிருப்பு பஜார் பகுதியில் கையில் மஞ்சள் நிற பையுடன் சுற்றித்திரிந்த நபர்‌ ஒருவர், அருகேயிருந்தவரிடம், `என்னிடம் ஒரு சிலை இருக்கிறது. அதை விற்றுத்தந்தால் நாம் இருவரும் சேர்ந்து மது அருந்தலாம்’ என ஆசைக்காட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோனவர், சிலை வைத்திருப்பதாகக் கூறிய நபர் குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சந்தேக நபரின் நடமாட்டம் குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்தினோம். அப்போது காவல் நிலையத்துக்கு ஏற்கெனவே கிடைத்த தகவலின்படி, கையில் மஞ்சள் பையுடன் அந்த வழியே சென்ற இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினோம்.

இதில் பிடிபட்ட நபர் வத்திராயிருப்பைச் சேர்ந்த சந்தனம் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் என்ன இருக்கிறது எனக் கேட்டதற்கு, ‘கரி’ உள்ளதென பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில் பையை வாங்கி சோதனை செய்து பார்த்ததில், அதில் பள்ளி வளாகத்திலிருந்து திருடப்பட்ட ஒன்றரை அடி உயரமுள்ள காரைக்கால் அம்மையாரின் வெண்கல சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனே, சந்தனத்தைக் கைதுசெய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம். காரைக்கால் அம்மையாரின் வெண்கல சிலையும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.