வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: பெற்றோரை கவனிக்காமல், தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு எழுதி தரப்பட்ட சொத்து பத்திரம் ரத்து செய்வதோடு சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாவர் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

சொத்து இருக்கும் வரை பெற்றோரை தாங்கி பிடிக்கும் பிள்ளைகள், சொத்துக்களை எழுதி வாங்கியதும் அவர்களை கண்டுக்கொள்ளாமல் தவிக்கவிடும் போக்கு புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தங்களுக்காக, தங்களது வாழ்க்கையை செலவழித்த பெற்றோரை வயதான காலத்தில் பராமரிக்க பெரும்பாலான பிள்ளைகள் தயாராக இருப்பதில்லை.
வெளியில் சொன்னால் கவுரவம் போய்விடுமோ என்ற எண்ணத்திலும், பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தாலும், சங்கடங்களை வெளியில் சொல்லாமல் பெற்றோர் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறும்போது பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பாமல், வீட்டை வெளியேறி அனாதை இல்லங்களிலும், பிச்சையெடுத்தும் கடைசி காலத்தை கழிக்கின்றனர்.
சொத்தை எழுதி கொடுத்துவிட்டு மருத்துவ செலவிற்கும், சாப்பிட்டிற்கும் வழியின்றி மனம் போன போக்கில் கடைசி நாட்களை வீதியில் எண்ணிக் கொண்டுள்ளனர்.இதுகுறித்த குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக புதுச்சேரியில் அதிகரித்து வருவதை தடுத்திட கலெக்டர் மணிகண்டன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;
சொத்துக்களை எழுதி வாங்கிய பின், பெற்றோரை முதுமை காலத்தில் பராமரிக்காமல், முதியோர் இல்லங்களிலும், தெருக்களிலும் விட்டு செல்வது வேதனைக்குரியது.
சொத்துக்களை பெற்றுக் கொண்டு முறையாக பராமரிக்கவில்லை எனில், பெற்றோர் தாராளமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். பிள்ளைகள் பராமரிக்கவில்லை என்ற மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தரப்படும்.
பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் கடமை. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு விரட்டப்படுகின்றனர். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு பிள்ளைகளும் சிந்திக்க வேண்டும். இன்று அவர்கள் என்றால், நாளை நீங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோரை பராமரிக்காதது குறித்து அதிக அளவில் புகார் வருவதால், மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் மீது எழுதப்பட்டுள்ள சொத்து பத்திரம் ரத்து செய்வதுடன், சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைள் உள்ளாவர் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement