உக்ரைனில் நீடித்து வந்த அமைதி மீண்டும் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றிருக்கிறது. இது தொடர்பான மாநாடு, நியூயார்க்கில் யு.என்.ஜி.ஏ-வில் நேற்று நடந்தது. அப்போது, உக்ரைனில் ரஷ்யாவின் விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவும், ரஷ்யப் படைகளைத் திரும்பப் பெறவும், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஐ.நா சபை ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பான வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. சீனா, இந்தியா உட்பட 32 நாடுகள் வாக்களிக்கவில்லை. 7 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்த தீர்மானத்தின் போது ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருசிரா காம்போஜ், “இந்தியா ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை நிலைநிறுத்த ஆதரவாக இருக்கிறது.
எனவே, ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் கருத்தையே இன்னும் உறுதியுடன் வலியுறுத்துகிறோம். பேச்சுவார்த்தை, இராஜதந்திர நடவடிக்கைகளால் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நாங்கள் நம்புகிறோம்.

இன்றைய தீர்மானத்தின் நோக்கத்தைக் கவனத்தில் கொள்வதால், எங்களுக்கு அதன் உள்ளார்ந்த வரம்புகள் உள்ளன. நிலையான அமைதியைப் பாதுகாப்பதற்காக ஐ.நா-வின் தீர்மானத்தை ,நாங்கள் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.