“வாசிப்பை நேசிப்போம்” நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

Writer S Ramakrishnan: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து என்னும் சிறார் புதினத்தைத் தேசாந்திரி பதிப்பகம் டிசம்பர் 2020 இல் (72 பக்கங்கள்) வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிக்குப் பேருந்தை ஒன்றை வாங்கி இயக்குவது அப்பள்ளி தலைமை ஆசிரியரின் கனவு. அக்கனவு சாத்தியம் என்பதை நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்தில் புனைவாக்கியுள்ளார் எஸ்.ரா. ஆனால் அஃது ஒரு பெரும்போராட்டம். அதனை எதிர்கொள்ள மனத் திண்ணம் வேண்டும் என்பதை நாவல் பிரதிபளிக்கிறது.

ஆதலால்தான் என்னவோ, ’நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’ என்னும் நூலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

தேவை ஒரு பேருந்து, யார் டிரைவர்?, பேருந்தின் வருகை, ஒரு மோதல், பேருந்தின் பறிமுதல், சேதுவின் அம்மா, பேருந்தின் காய்ச்சல், ரெட் டிராகனுடன் போட்டி என எட்டு அத்தியாயங்களாகக் கதை வார்க்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிக்கென்று தனித்த பேருந்து ஒன்றை வாங்கி இயக்குவதில் ஏற்படும் போராட்டமே கதையின் மையம். இக்கதைக் களம் கரிசல் நிலமான அருப்புக்கோட்டை மாவட்டம் மேக்கரை கிராமம். கதை மாந்தர்களாகப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன், முந்நாள், இந்நாள் மாணவர்கள், விக்டோரியா பள்ளி நிர்வாகி ராஜலெட்சுமி, டிரைவர் பாலகுரு, சரவண மூர்த்தி, டிரைவர் ஜேக்கப், துரைக்கண்ணு, கிராம மக்கள் ஆகியோர் முக்கியக் கதைமாந்தர்களாக உள்ளனர். பேருந்தை வாங்குவதில் உள்ள சிக்கல், குழப்பம், சுமை என்றான போராட்டத்துடன் கதை நகர்கிறது.

அரசுப் பள்ளி வாங்கிய பேருந்திற்கும் தனியார் பள்ளிப் பேருந்திற்கும் போட்டி உண்டாகிறது. அதனால், பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகிறது. அதன் விளைவாக ஏற்படும் விளைவுகள் கலந்த போராட்டக் களமாகக் கதைப் போக்கு உள்ளது. வேடிக்கையான நிகழ்வுகள், மழைக்கால மகிழ்வுகள் என்றுள்ள பதிவுகள் வாசிப்பின் சுவையை அதிகரிக்கிறது. அரசுப் பள்ளி x தனியார் பள்ளி, பெருந்தன்மை x ஆற்றாமை, வெற்றி x தோல்வி என்பதான முரண்களின் இயல்புகள், திருப்பங்கள் நிறைந்த கதைப்பின்னலோடு சுவாரசியமாக யதார்த்தத்தோடு கதையைச் செறிவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.

அருப்புக்கோட்டை மாவட்டம் மேக்கரை கிராமத்திலுள்ள தணிகை ஆரம்ப அரசு பள்ளியில் ஏராளமானோர் பயின்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்று மிக உயரிய இடத்திற்குச் சென்றுள்ளனர். பள்ளியும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது. இப்பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியராகப் பழனியப்பன் பணியாற்றுகிறார். தணிகை கிராமத்தின் அருகில் உள்ள ஆதனூரில் விக்டோரியா ஆங்கிலப் பள்ளி உள்ளது.

இப்பள்ளி உரிமையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் கல்குவாரியும் நடத்தி வருபவர். இந்த ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகியாக அவரது மனைவி ராஜலெட்சுமி உள்ளார். இவர்கள் நடத்தும் பள்ளியில் அனைத்திற்கும் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தணிகை அரசுப் பள்ளியில் எதற்கும் கட்டமில்லை. இருப்பினும், மக்கள் தொடர்ந்து தனியார் பள்ளிக்கே செல்ல முற்படுகின்றனர். இதன் காரணமாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மக்களுடன் பல்வேறு கட்ட கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். அதனடிப்படையில் மக்களின் ஆதரவோடு அரசுப் பள்ளிக்கென்று தனித்த பேருந்து ஒன்றை வாங்கத் திட்டமிடுகிறார் தலைமை ஆசிரியர்.

தணிகை அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் உதவியோடு அரசுப் பள்ளிக்குப் பேருந்து ஒன்றை வாங்குகிறார். இந்தப் பேருந்தை இயக்க இந்நாள் பள்ளி மாணவர் சேதுவின் தந்தை பாலகுரு நியமிக்கப்படுகிறார். அரசுப் பள்ளி பேருந்து ஒன்றைச் சொந்தமாக வாங்கி இயக்குவதை விக்டோரியா பள்ளி நிர்வாகியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எந்த விதத்திலாவது முடக்க எண்ணுகிறார். அப்போது, தொடங்கிய கடும்போட்டி உச்சம் வரை செல்கிறது.

மேலும், ஆங்கிலப் பள்ளி நிர்வாகியின் சூழ்ச்சியால், அரசுப் பள்ளிப் பேருந்து காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசுப் பள்ளியின் மஞ்சள் பேருந்து பலவிதமான அவமானம், நெருக்கடி, சுமைகள் உள்ளிட்டவற்றைக் கடந்து செல்கிறது. அரசுப் பள்ளி, தனியார் பள்ளி ஆகிய இரு பேருந்துகளும் எப்பொழுதெல்லாம் சந்திக்கிறதோ? அப்போதெல்லாம் போட்டி உணர்வில்தான் இயங்குகின்றன. இப்போட்டியைப் பேருந்தில் பயணிக்கும் இரு பள்ளி மாணவர்களும் விரும்பிக் கொண்டாடுகின்றனர்.

காலை வேளையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வரும் அரசுப் பள்ளி பேருந்தானது, சந்தைக்குச் செல்லும் வியாபாரிகள், மருந்து வாங்கச் செல்பவர்கள், வெளியூருக்குச் செல்பர்வர்கள் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்கிறது. மழைக் காலத்தில் அரசுப் பேருந்தினுள் மழைநீர் வடிகிறது. இம்மழை நீரைக் கண்ட மாணவர்கள் தன் நீண்ட கால நண்பனைச் சந்தித்த மகிழ்ச்சியில் கொண்டாடித் திளைத்தனர். பேருந்தினுள் மழைநீர் வந்ததால் பேருந்திற்குக் காய்ச்சல் வந்தது. பேருந்து மருத்துவரான மெக்கானிக் மருந்தளித்துச் சரி செய்கிறார். மேலும், பழைய பேருந்து என்பதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. அதனைச் செப்பனிட்டு மீண்டும் மீண்டும் பயணிக்கிறது அரசுப்பள்ளி.

நிகழ்வுகளால் பின்னப்பட்டுள்ள இக்கதையாடலை வாசகர்கள் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. தலைமை ஆசிரியர் பழனியப்பன் செயல்படக்கூடிய ஆசிரியராகத் திகழ்வதால் மாணவர்களின் நலனில் அக்கறைச் செலுத்துவதை இந்நூல் பறைசாற்றுகிறது. ஒவ்வொருவரின் இல்ல நூலகத்தில் இடம் பெற வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. அரசுப் பள்ளியில் படித்து உயர்ந்த நிலைக்குச் சென்றவர்களும், ஆசிரியர்களாக ஆனவர்களும், பெற்றோர்களும், கல்விசார் சிந்தனை மற்றும் கல்விப் புலத்தின் மீது கவனம் செலுத்துபவர்களும் வாசிக்க வேண்டிய நூலாக நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.