அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா தனது கலகலப்பான பேச்சாளும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் சிவா நடித்துள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்னால் குறும் படமாக வெளியான இந்த கதை தற்போது திரைப்படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவா உடன் இணைந்து அஞ்சு குரியன், பகவதி பெருமாள், பாலா, மொட்ட ராஜேந்திரன், மாகாபா ஆனந்த், மேகா ஆகாஷ், ஷாரா, மனோ, திவ்யா கணேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.
இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் சிவா உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மறுபுறம் ஷாரா AI தொழில் நுட்பத்தில் ஒரு சாப்ட்வேரை உருவாக்குகிறார். அந்த சாப்ட்வேர் எதிர்பாராத விதமாக மிர்ச்சி சிவாவிடம் கிடைக்கிறது. அதன் பின்பு சிவா வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின் கதை. வழக்கம்போல படம் முழுக்க மிச்சி சிவா தனது ஒன் லைன் பஞ்ச் வசனங்கள் மூலம் அசத்தியிருக்கிறார். அவர் திரையில் வந்தாலே ரசிகர்கள் ஆரவாரம் ஆகி விசில்களை பறக்க விடுகின்றனர். சாப்ட்வேர் மூலம் பேசும் பெண்ணாக நடித்துள்ள மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார்.
சிவா மற்றும் மேகா ஆகாஷ் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. சாப்ட்வேரை பயன்படுத்தி சிவா செய்யும் ரகளைகள் மற்றும் குறும்புகள் கைதட்டல்களை பெறுகின்றன. ட்ரோன் மூலம் உணவு டெலிவரி, லக்ஸரி காரில் உணவு டெலிவரி என காட்சிக்கு காட்சி அசத்தி உள்ளார். சிவாவின் அப்பாவாக மனோ தனது நடிப்பின் மூலம் சிரிப்பு வர வைக்கிறார். அஞ்சு குரியன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக கைண்டு உள்ளார். தற்போது வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் நம்மை ஆட்சி செய்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை காமெடி கலந்த திரைக்கதையில் எடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ஷா.
படத்திற்கு தேவையான அளவில் ஒளிப்பதிவு மற்றும் பாடல்கள் உள்ளன. இப்படி ஒரு சிம்பிளான கதையை பெரிதாக போர் அடிக்காமல் கொண்டு சென்றதற்கு இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். படம் ஆரம்பிக்கும் போதே இக்கதையில் லாஜிக் எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லி விடுகின்றனர், ஏனெனில் படத்தில் நடக்கும் எந்த ஒரு காட்சிக்கும் லாஜிக் இல்லை. கிளைமாக்சில் சுந்தர் சி படம் போல அனைவரும் ஒரு இடத்தில் சேர்ந்து செய்யும் லூட்டி நன்றாக இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக டைம் பாஸ் செய்வதற்கு சிறந்த படம் தான் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்.