ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி: 6 ஆண்டுகளில் ரூ.5,318 கோடி பயன்படுத்தப்படவில்லை – ஆர்டிஐ மூலம் தகவல்

ஆதிதிராவிடர் துணைத்திட்டங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.5,318 கோடி அளவுக்கு நிதி பயன்படுத்தவில்லை, அதிலும் குறிப்பாக 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ 2,418 கோடி பயன்படுத்தப்படவில்லை என்று புகார் எழுந்தது.

நிதி

இது குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல்களை பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் நம்மிடம் பேசும்போது “மாநிலத்தின் மொத்த திட்ட நிதியிலிருந்து தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மக்கள் தொகைக்கு இணையாக (20.01 சதவிகிதம்) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதோடு, பல்வேறு துறைகளின் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக ஆதிதிராவிடர் மக்களை சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலைகளில் இதரப் பிரிவினருக்கு இணையாக உயர்த்திட வழிவகுக்கும் ஆதிதிராவிடர் துணைத்திட்டம், தமிழ்நாட்டில் கடந்த 1980-81-ம் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி, கடந்த 2016-17 முதல் 2021-22  வரையிலான 6 நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி, அந்த நிதியிலிருந்து திட்டங்களுக்கு பயன்படுத்திய நிதி, பயன்படுத்தாமல் மீதமான நிதி விவரங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் பெற்றேன். அந்த தகவல்படி கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.75,930 (எழுபத்தி ஐயாயிரத்து தொள்ளாயிரத்து முப்பது கோடி) வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அரசு அளித்துள்ள தகவல்

அதில், ரூ 70,969 (எழுபதாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பது கோடி) வரை திட்டங்களுக்கு பயன்படுத்தியது போக மீதம் ரூ 5,318 (ஐந்தாயிரத்து முன்னூற்றி பதினெட்டு கோடி) வரை பயன்படுத்தாமல் அரசுத்துறைக்கே திரும்ப சென்றிருக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ 2,418 (இரண்டு கோடியே நானூற்றி பதினெட்டு கோடி) திரும்ப சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஆதிதிராவிடர் துணைத்திட்டத்தை செயல்படுத்த 48 துறைத்தலைமைகளை உள்ளடக்கிய 20 செயலாக்கத்துறைகள் வாயிலாக ஆதிதிராவிடர் மக்களின் மேம்பாட்டுக்காக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட செயலாக்கத் துறைகளால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள், இந்தத் துறையுடன் இணைந்து செயலாற்றுகின்றனர். மாநில அளவில் இத்துணைத் திட்டத்தின் கீழ் திட்டங்கள் தீட்டுவதற்கும், செயல்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்புத் துறையாக இது விளங்குகிறது.

ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட நிதி விவரம்

ஆதிதிராவிடர் நல ஆணையர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டும், இவ்வளவு பெரிய நிதி பயன்படுத்தாமல் இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிதி பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த 2022-23 நிதியாண்டிலும் ஆதி திராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ.16,442 கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் கடந்த  ஏப்ரல் முதல் டிசம்பர் வரை வெறும் ரூ.5,976 கோடிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதியுள்ள 3 மாதங்களில் ரூ.10,466 கோடிகளை, திட்டங்களுக்கு செலவு செய்ய முடியுமா? என்பது சந்தேகமாக இருக்கிறது.

கார்த்திக்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான இத்துணைத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்துவதற்கான தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருவதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இதில் ஒரு தீர்வு கிடைக்கும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.