O Panneerselvam: இபிஎஸ்-இன் தாத்தா கட்சியா அதிமுக? பிரஸ் மீட்டில் சீறிய ஓபிஎஸ்

O Panneerselvam On Supreme Court Verdict: சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில்,  கட்சியின் அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன்,  ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “மக்களை நாடி செல்ல உள்ளேன். மக்களிடம் நிச்சயம் நியாயம் கேட்போம். எம்.ஜி ஆர்., ஜெயலலிதா உயிரை கொடுத்து 50 ஆண்டு காலம் அதிமுகவை காப்பாற்றியுள்ளனர்.

அவர்கள் வகுத்து கொடுத்த சட்ட விதியை காப்பாற்ற போராடி வருகிறோம். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றியதை ரத்து செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்படவில்லை.

கூவத்தூரில் நடந்ததை போல், கட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி. மக்கள் மன்றத்தை நாடி செல்ல படை புறப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். சுற்றுப்பயணம் உறுதியாக விரைவில் தொடங்கும். மாவட்டம் வாரியாக மக்களை சந்திக்க உள்ளோம். 

எடப்பாடி பழனிசாமிதான் திமுகவின் A-Z டீம். ஆயிரம் இருக்கிறது, ஒவ்வொன்றாக பொதுவெளியில் வரும். என்னையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என இபிஎஸ் கூறுகிறார். இது அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா?. ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார். இனி தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு சென்று பெறுவோம். கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன். மார்ச் மாதம் இறுதிக்குள் முப்பெரும் விழா நடத்தப்படும்” எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.

முன்னதாக பேசிய பண்ருட்டி ராமசந்திரன்,”பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும். இந்த நிலையில் வழக்கை சரிவர விசாரிக்காமல் ஆராயாமல் உச்ச நீதிமன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டி கழித்துள்ளது. எனினும் எங்களது தரப்பு நியாயம் வெல்லும். உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிதான் மாப்பிள்ளை, அவர் போட்டிருக்கும் சட்டை எங்களுடையது என்ற ரீதியில் உள்ளது” என்றார். 

தொடர்ந்து பேசிய மனோஜ் பாண்டியன்,”அதிமுக பொதுகுழுவில் நிறைவேறப்பட்ட தீர்மானம் செல்லும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எங்கும் குறிப்பிடவில்லை. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு, உயர்நீதிமன்றத்தில் தீர்மானம் குறித்த சிவில் வழக்கை கட்டுப்படுத்தாது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த இடத்திலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கவில்லை” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.