திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததின் காரணமாக 700க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் பொதிவரும் பருவத்தில் நெற்பயிர்கள் தண்ணீருக்காக காத்திருக்கிறது
குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க துவங்கினர். அப்போது, கங்கைகொண்டான் பகுதியில் உள்ள விவசாயி இரோசியஸ் தங்கள் பகுதியில் உள்ள சிந்தான்குளம் என்ற குளத்தை காணவில்லை என ஆட்சியரிடம் மனு அளித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குளம் தூர்வாரப்பட்டுள்ளது. கடந்தாண்டு வரை மீன்பாசி ஏலம் விடப்பட்டு அதற்கான தொகையும் அரசுக்கு கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு குளம் இருந்த இடமே தெரியவில்லை என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விவசாயி இரோசியல் கூறுகையில், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கும் மானாவாரி பயிர்கள் விளைவிப்பதற்கும் இந்த குளம் உபயோகமாக இருந்தது. கடந்தாண்டு பெய்த மழையில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் மீன் பாசி ஏலமும் விடப்பட்டது. ஆனால் தற்போது குளம் இருந்த தடமே தெரியவில்லை. விசாரித்ததில் சூரிய மின்சாரம் தயாரிக்க, ஆலை அமைக்க உள்ள டாடா நிறுவனத்திற்கு இந்த இடமும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டால் அங்கு குளமே இல்லை என அவர் பதில் அளிக்கிறார். நீர் நிலைகளை அழிப்பது தவறானது. இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறிய பின்னரும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது சரியானதா?என்ற கேள்வி எழுகிறது என கூறினார். வடிவேலு பாணியில் குளத்தை காணவில்லை என ஆட்சியரிடம் விவசாயி புகார் அளித்த சம்பவம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.