“ஸ்டாலினுக்கு ஆப்பு அடிக்கப் போகிறவர் செந்தில் பாலாஜிதான்” – எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு தொகுதியில் தலைவர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறும் நிலையில்,  அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஈரோட்டில் எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், “அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க. நிறுத்தி விட்டது. நாங்கள் கொண்டு வந்த மினி கிளினிக் திட்டம், தாலிக்குத் தங்கம், அம்மா குடிநீர், இருசக்கர வாகனத்துக்கு மானியம், அம்மா சிமெண்ட் போன்றவற்றை நிறுத்தி விட்டனர். கட்டுமானப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. ரூ.290-க்கு விற்கப்பட்ட சிமெண்ட் விலை தற்போது ரூ. 450க்கு விற்கப்படுகிறது. ரூ.35,000க்கு விற்ற 1 டன் கம்பியின் விலை ரூ.75,000 ஆகவும், ரூ. 6-க்கு விற்ற செங்கல்லின் விலை ரூ.12 ஆகவும், ஜல்லி, எம்.சாண்ட், மணல் என எல்லாவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

பிரசாரம்

ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.1,000 வீதம் உரிமைத்தொகை தருவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது கேட்டால் எல்லாருக்கும் கொடுக்க முடியாது. கணக்கு பார்த்து கொண்டிருக்கிறோம் என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆட்சிக்கு வரும்போது எல்லோருக்கும் கொடுப்பதாகத் தானே கூறினீர்கள். அதை நம்பித்தான் மக்கள் ஓட்டு போட்டார்கள். இப்போது மாற்றி பேசுகிறார்கள். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானதும் ஒரு பேச்சு.

இங்கு வீடு, வீடாக அமைச்சர்கள் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களிடம் கேளுங்கள். காஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100-ம், மாதந்தோறும் உரிமைத்தொகை ரூ.1,000 வீதம் 22 மாதங்களுக்கு கணக்கு போட்டு ரூ.24,200 தரும்படி ஸ்டாலினிடம் கேளுங்கள். ஸ்டாலின் நம் குடும்ப பெண்களுக்கு கடன்பட்டுள்ளார். அதை பெண்கள் கேட்க வேண்டும்.
இன்று இத்தனை அமைச்சர்கள் சுற்றி, சுற்றி வருகிறார்கள். இதற்கு முன்பு அவர்கள் வந்ததுண்டா. எனவே மக்கள் ஸ்டாலினுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து மாவட்ட கலெக்டர், தேர்தல் நடத்தும் அலுவலர் என எல்லோருக்கும் புகார் கொடுத்து விட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி, தென்னரசு பிரசாரம்

உண்மையில் தி.மு.க-வினருக்கு தெம்பும், திராணியும் இருந்தால் வாக்காளர்களை அடைத்து வைக்காமல் ஓட்டு கேட்டுப் பாருங்க. அவர்களுக்கு பயம் வந்து விட்டது. வாக்காளர்களை 15 நாளாக ஒளிச்சு வைத்திருக்கீங்க. ஒருவருக்கு தண்டனை தருவதானால் அவர்களை ஒரு இடத்தில் அடைத்து வைப்பார்கள். அப்படி இந்தத் தொகுதி வாக்காளர்களுக்கு தி.மு.க. தண்டனைதான் வழங்கியுள்ளது. இன்னும் சில நாள்கள் போனால் அவர்களுக்கு மனநல மருத்துவர் சிகிச்சை அளிக்கும் நிலை வரும். எனவே இந்த தேர்தலில் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டுங்கள். உங்களை பட்டியில் அல்ல, கூண்டில் அடைத்தாலும் இரட்டை இலைக்கு தான் நீங்கள் ஓட்டு போடுவீங்க என்று அவர்களுக்கு உணர்த்துங்கள்.

தி.மு.க. ஒரு கார்ப்ரேட் கம்பெனி அதற்கு ஸ்டாலின் தான் எம்.டி., உதயநிதி சேர்மன், கனிமொழி டைரக்டர். ஏற்கெனவே சேர்மேனும், டைரக்டரும் பேசி சென்று விட்டார்கள். நாளை (இன்று) எம்.டி. (ஸ்டாலின்) வருவார். அவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள். ப.சிதம்பரம் பேசும்போது, நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க.வின் மக்கள் நல்வாழ்வுத் துறை இணை அமைச்சராக காந்திசெல்வன் இருந்த போது 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீட் தேர்வு கொண்டு வருவதற்கான அரசாணை பிறப்பித்து கெஜட்டில் வெளியிடப்பட்டது. தைரியமும், தில்லும் இருந்தால் இதுபற்றி  முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் பிரசாரம் செய்யும் போது பதிலளிக்க வேண்டும்.

மலர்களைத் தூவ…

நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா. காங்கிரஸின் அமைச்சராக சிதம்பரம் இருந்தார். அவரின் மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு எதிராக வாதாடியவர். சிதம்பரம் அவர்களே உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறோம். நீங்கள் அரசியல் நடத்துவதற்காக உண்மையை மறைத்து பேசாதீர்கள். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது தி.மு.க. ஊழல் பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. எங்களை மிரட்டுவதற்காக எங்கள் மீது வழக்கு தொடருகிறீர்கள். இதெற்கெல்லாம் அ.தி.மு.க. தொண்டன் எப்போதும் பயப்பட மாட்டான்.

எடப்பாடி பழனிசாமி, தென்னரசு

உதயநிதி ஸ்டாலின், கொடநாடு கொலை வழக்கு என்று எங்களை மிரட்டுகிறார்கள். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது அ.தி.மு.க. அரசு. அவர்களை ஜாமீனில் எடுத்தது சென்னையைச் சேர்ந்த தி.மு.க. பொறுப்பாளர், தி.மு.க. வக்கீல், ஒரு தி.மு.க. எம்.பி. ஆகியோர்தான். அப்படியானால் யார் தவறு செய்துள்ளார் என்று பாருங்கள்.

மத்திய அரசு 2030-ல் எட்ட வேண்டிய உயர்கல்விக்கான இலக்கை 2019-லேயே நாம் எட்டி விட்டோம். உணவு உற்பத்தியில் 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தோம். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அக்கறையுடன் தடுக்க நடவடிக்கை எடுத்தோம். கொரோனா தொற்றுக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வந்தோம். மக்கள் பசியால் தவித்தபோது அம்மா உணவகத்தில் இலவச உணவு அளித்தோம்.

இன்று இந்தியாவிலேயே அதிக அளவில் தார்சாலை அமைத்திருப்பது தமிழ்நாட்டில் தான். விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம், மின்சாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறி இருக்க அ.தி.மு.க. அரசு தான் காரணம்.
ஆனால் இந்த அரசு அதையெல்லாம் மறைத்து மக்கள் மீது பல்வேறு வரிகளை சுமத்தி வருகிறது. மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார் ஸ்டாலின். எல்லாவற்றுக்கும் வரி போடுறாங்க. விட்டால் நடந்து செல்வதற்கு கூட வரி விதிப்பார்கள். இதையெல்லாம் மறைத்து விட்டு தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்.
தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அ.தி.மு.க. ரூ.4.80 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்ததாக தி.மு.க. கூறுகிறது. ஏற்கெனவே தி.மு.க. ஆட்சி முடியும்போது ரூ. 1.34 லட்சம் கோடியை கடனாக வைத்திருந்தனர். கொரோனா தாக்கத்தால் தொழில் இழப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்ட போதும் அதை சமாளித்திருக்கிறோம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த 22 மாதங்களில் ரூ. 1.62 லட்சம் கோடி கடன் வாங்கியிருப்பதாகக் கூறுகிறீர்கள். இந்த கடன் மூலம் மக்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்ட திட்டங்கள் என்ன,

எடப்பாடி பழனிசாமி, தென்னரசு பிரசாரம்

உங்களை ஏமாற்றுவதற்காகவே ஒருவரை அனுப்பியுள்ளார்கள். அவர்தான் செந்தில் பாலாஜி.  ஆர்.கே. நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து பணம் கிடைக்கும் என்று ஏமாற்றி ஒருவரை (டி.டி.வி.தினகரன்) வெற்றி பெறச் செய்தார். பின்னர் வெற்றி பெற்றவர் அந்தத் தொகுதிக்குச் சென்றபோது மக்கள் கல்லால் அடித்தார்கள். எனவே, இந்தத் தொகுதியில் பணியாற்றி வரும் செந்தில்பாலாஜியை மக்கள் நம்ப வேண்டாம்.

எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு ஆப்பு அடிக்க போறவர் அவர்தான். பச்சோந்தியான அவர் 5 கட்சிகளுக்கு மாறியவர். அவரின் யோசனையில் உருவானது தான் மக்களை பட்டியில் அடைப்பது. எனவே அவர் பேச்சை நம்பி காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள்” என்றார்.

ஐ.டி.விங்க் நூதன பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி செல்லும் வழியெங்கும் ரோஜாப் பூக்களைத் தூவி கட்சியினர் வரவேற்றனர். நேற்று மாலை முக்கியத் தலைவர்களின் பிரசாரம் இல்லாததால் வழக்கத்தை விட உள்ளூர் வாக்காளர்கள் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு மாஸ் லீடருக்கான வரவேற்பை அளித்த அ.தி.மு.க.வினர் கொடி, தோரணங்கள், அலங்கார வளைவு, தாரைத் தப்பட்டை என எல்லாவற்றிலும் பிரமாண்டத்தைக் காட்டி பல இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறினர்.
அ.தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப அணியினர் உண்டியல் குலுக்கி, அதில் தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் என 22 வகையான அட்டைகளை வைத்து நூதன முறையில் பிரசாரம் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.