மேல்மலையனூர்: மேல்மலையனூர் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி பெருவிழா கடந்த 18ம் தேதி துவங்கி தொடர்ந்து 13 நாள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. தேரோட்டத்திற்கு வந்திருந்த வேலூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற தனியார் வங்கி மேலாளர் விநாயகம் (64) என்பவர் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தார். பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல், மேல்மலையனூர் தாலுகா கோடியகொள்ளை கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (55) என்பவரும் கோயில் வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேரோட்டம் இருவர் பலியானது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
