கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் | Speech, interview, report

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என முடிவு எடுத்ததை விமர்சிக்கும் துரோக சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், வரும் லோக்சபா தேர்தலில், நம் கட்சியினர் அயராது உழைப்பை கொடுக்க வேண்டும். அதற்கான உறுதி ஏற்கும் நாளாக, ஜெயலலிதா பிறந்த நாள் அமைய வேண்டும்.

‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம்’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருது!

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

சென்னை பெருங்குடியில் துவங்கி, மாமல்லபுரம், கல்பாக்கம், புதுச்சேரி வழியாக கடலுாருக்கு ரயில் பாதை அமைப்பது, தமிழகத்தின் கனவு ரயில் திட்டம். ஆனால், பெருங்குடிக்கு பதிலாக, செங்கல்பட்டில் இருந்து திட்டத்தை துவங்க, ரயில்வே துறை திட்டமிட்டுஇருப்பதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதனால் சென்னை மாநகர மக்களுக்கு எந்த பயனும் இருக்காது. அதுமட்டுமின்றி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டி ரயில் பாதை என்ற கனவு திட்டம் சிதைந்து விடும்.

latest tamil news

மீனவர்கள் வாழ்வாதாரம், நிலம் எடுப்புன்னு பல விஷயங்களை இதில் பார்க்கணும்… சிறு சிறு மாறுதல்கள் ஏற்கப்படாவிடில், கடைசி வரை அது கனவு திட்டமாகவே போயிடும்!

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், தி.மு.க., கூட்டணி கட்சியினர் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.,வினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்க, நெருங்க இது இன்னமும் அதிகரிக்கும். தேர்தல் ஆணையம் நடுநிலை யோடு செயல்பட வேண்டும்.

இனி நடுநிலையா நடந்து என்ன புண்ணியம்… அங்க, கொடுக்க வேண்டியதை எல்லாம் கொடுத்து முடிச்சிட்ட ஆளுங்கட்சியினர், இன்னைக்கு சாயந்தரம் மூட்டையை கட்டிடுவாங்களே!

தமிழக சட்டசபை காங்., குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:

ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பா.ஜ.,வினர் சென்னையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற கர்னல் பாண்டியன், ‘எங்களுக்கும் குண்டு போட தெரியும்; சுட தெரியும்’ என, தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தான் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என கருதாமலும், சமூக அக்கறை இல்லா மலும் பொது வெளியில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்லவேளையாக, ‘மக்கள் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் துணி துவைத்ததால், ராணுவ வீரரை சமூக அக்கறையுடன் அடித்துக் கொன்ற, தி.மு.க., கவுன்சிலருக்கு விருது வழங்கி கவுரவிக்கணும்’னு வக்காலத்து வாங்காம விட்டாரே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.