மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: ஸ்டாலின் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தலின் போது திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளில் அதிகம் கவனம் பெற்றது, மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் தரும் திட்டம் தான். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 22 மாதங்களில் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது ஸ்டாலின் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
இன்று காலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஈரோட்டுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள பந்தம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

குறிப்பாக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கொண்டுவந்த மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை விளக்கி பேசினார்.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் அவர், “நீட் தேர்வு விலக்கு அளிக்க இரண்டு முறை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஐந்து ஆண்டுகள் செய்ய வேண்டிய பணியை தான் நான் தேர்தல் வாக்குறுதியில் சொல்லி உள்ளேன்” என்று கூறினார்.

“பொதுமக்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவர் மட்டுமல்ல, யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். பெண்களுக்கு உரிமை தொகை வழங்க கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன். அதிமுக அரசு கஜானாவை காலி செய்து விட்டது. அதை நாங்கள் சரி செய்து வருகிறோம். மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த அறிக்கையில் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என தெரிவிக்கப்படும்.

85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். 15 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே உள்ளன. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழப்பார். திமுக கூட்டணி வேட்பாளர் வி கே எஸ் இளங்கோவன் 70 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பொதுமக்கள் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.