குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான வயதை 6 ஆக உயர்த்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதிலிருக்கிற நன்மை, தீமைகள் குறித்து அறிந்து கொள்ள கல்வியாளர்கள் ராஜம்மாள் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரிடம் பேசினோம். கல்வி

கல்வியாளர் ராஜம்மாள் பேசுகையில், “வெளிநாடுகளில் கே.ஜி. வகுப்புகளில் விளையாட மட்டுமே செய்கிறார்கள் குழந்தைகள். நம் நாட்டு கே.ஜி. வகுப்புகளிலும் குழந்தைகள் விளையாட மட்டுமே செய்ய வேண்டும். சில பள்ளிக்கூடங்களில் மட்டுமே கே.ஜி.யில் எழுத வைப்பதில்லை. மூன்று அல்லது மூன்றரை வயதிலேயே குழந்தைகளை எழுத வைக்கிற பள்ளிக்கூடங்கள் தான் இங்கே அதிகம். இது குழந்தைகளுக்குச் செய்கிற கொடுமை.
இந்நிலை மாற வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு நன்கு புத்தி தெரிந்த 6 வயதில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதுதான் சரி. இந்த வயதில்தான் பிள்ளைகளால் தெளிவாகப் பேச முடியும். 6 வயதில், முதல்வகுப்பில் சேர்ந்தால், ப்ளஸ் டூ படிக்கையில் 18 வயதாயிருக்கும். இந்த வயதில் மாணவர்களுக்குப் படிப்பு விஷயத்தில் இன்னும்கூட முதிர்ச்சியிருக்கும் என்றே நினைக்கிறேன்.
இதில் மைனஸ் என்று பார்த்தால், கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில், குழந்தையை கே.ஜி. வகுப்பில் சேர்ப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கும். இதிலும், தனிக்குடித்தனமாக இருப்பவர்கள் பாதி நாள் கே.ஜி, பாதி நாள் டே கேர் என்று பிள்ளைகள் இருக்கையில் பத்திரமாக உணர்வார்கள். மற்றபடி, ’17 வயசுல ப்ளஸ் டூ முடிக்க வேண்டியது. ஒரு வருடம் போச்சே’ என்று பல பெற்றோர்கள் நினைப்பார்கள். ஒரு வருடம் தாமதமானால் பிள்ளைக்கு நல்லதுதான் என்பதுதான் என் கருத்து” என்கிறார்.

கல்வியாளர் சோமசுந்தரம் பேசுகையில், “ஒரே வகுப்பில் படிக்கிற ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் ஒரு வயது வித்தியாசம்கூட இருப்பதை கவனித்திருக்கலாம். எல்லோரும் ஒரே வயதில் இருந்தால், கல்வி கற்கும் திறன் சமமாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில், குழந்தைகளை கே.ஜி வகுப்பில் சேர்க்க முடியாது. அதனால், தாத்தா – பாட்டி இல்லாத குடும்பங்களில் குழந்தையை யாரிடம் விடுவது என்ற பிரச்னை வரும்.
ஒரே மாதிரி கல்வி ஏற்புடையதுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இன்றைக்குப் பெரும்பான்மை குடும்பங்களில் இருவருமே வேலை பார்ப்பதால் அவர்களின் நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு கல்வியாளராக, பழைய சிஸ்டமே இருக்கட்டும் என்பதுதான் என் கருத்து” என்கிறார்.

குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான வயதை 6 ஆக உயர்த்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதுபற்றி, அவள் விகடன், ஃபேஸ்புக்கில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 6 என்பது சரியான வயது என்று 45.2 சதவிகிதம் பேரும், ஏற்கெனவே இருக்கிற 5 வயதுதான் சரியானது என 37.1 சதவிகிதம் பேரும், இரண்டுக்கும் பெரிய வேறுபாடில்லை என்று 17.7 சதவிகிதம் பேரும் வாக்களித்திருக்கின்றனர்.