ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்களின் பைக் டாக்சி சேவை விதிகளை மீறியதாக குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் டெல்லியில் பைக் டாக்சி சேவையை நிறுத்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பைக்கில் பயணிகளை ஏற்றிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாரும் செயல்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் படி, எந்த வகையான இருசக்கர வாகனத்திலும் பயணிகளை ஏற்றிச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு செய்தால் முதல் முறை ரூ.5,000, இரண்டாவது முறை ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தவில்லை என்றால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிரடியாக கூறப்பட்டுள்ளது. ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிறகே டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். பைக் டாக்சி சேவை மூலம் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டத்தை மீறும் செயல் என்பதால், அக்ரிகேட்டருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக் டாக்சி சேவைகளை இயக்குவதற்கு பல்வேறு மாநில அரசுகளுக்கும், பைக் டாக்சி சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு இடையேயும் சில பிரச்சனை நடந்து வருகிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு அனுமதியின்றி பைக் சேவையை தொடங்கிய ரேபிடோ நிறுவனத்துக்கு தடை விதித்தது. அதன் பின்னர் நிறுவனம், அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது, பிறகு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தும் நீதிமன்றம் நிறுவனத்திற்கு எந்தவொரு நிவாரணத்தையும் அளிக்க உத்தரவிடவில்லை. இப்போது தலைநகரில் இந்த பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மற்ற மாநிலங்களும் கூடிய விரைவில் தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.