ராயக்கோட்டை: ராயக்கோட்டை சந்தையில் முட்டைகோஸ் விலை சரிந்துள்ளது. உரிய விலை கிடைக்காததால் மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் பரவலாக முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர். சாதகமான சீதோஷ்ணம் நிலவியதால், கோஸ் விளைச்சல் அதிகரித்து, ராயக்கோட்டை சந்தைக்கு வரத்து இரட்டிப்பானது. அதே சமயம், வெளியிடங்களிலிருந்து வியாபாரிகள் வருகை இல்லாததால், ராயக்கோட்டை மண்டிகளில் முட்டைகோஸ் மூட்டை, மூட்டையாக டன் கணக்கில் தேங்கிக் கிடக்கிறது. இதனால், கோஸ் விலை சரிந்துள்ளது. சுமார் 2 கிலோ எடை கொண்ட 30 கோஸ் அடங்கிய மூட்டை, சுமார் 1.5 கிலோ எடை கொண்ட 50 கோஸ் அடங்கிய மூட்டை என தரம் பிரித்து ரூ.200க்கு கூவி கூவி விற்றாலும், வாங்குவதற்கு ஆள் இல்லை.
இதனை நீண்ட நாட்கள் திறந்த வெளியில் இருப்பு வைக்க முடியாத நிலையில், விற்பனையாகாத கோஸ்களை, அருகில் உள்ள நீர்நிலைகளில் மீன்களுக்கு உணவாக கொட்டும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மகசூலுக்கு வரும் கோஸ்களை ராயக்கோட்டையில் உள்ள மண்டிகளுக்கு கொண்டு வருகிறோம். அங்கிருந்து மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் வருகை இல்லாததால் கோஸ் விலை சரிந்து வருகிறது. மண்டிகளில் மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கிறது. ஒரு கிலோ ரூ.4க்கும், 2 கிலோ ரூ.7க்கும் விற்பனையாகிறது. உரிய விலை கிடைக்காத நிலையில், மீண்டும் வீட்டிற்கு எடுத்துச்செல்ல விரும்பாமல், ஒரு சிலர் அருகில் உள்ள ஏரிகளில் மீன்களுக்கு உணவாக கோஸ்களை கொட்டிச் செல்கின்றனர்,’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.