பூச்சி தாக்குதல் காரணமாக கொளத்தூர் சம்பா மிளகாய் உற்பத்தி 6,000 டன்னாக சரிவு: சாகுபடி குறைந்ததால் விலை அதிகரிப்பு

மேட்டூர்: பூச்சி தாக்குதல் காரணமாக, கொளத்தூர் சம்பா மிளகாய் உற்பத்தி சரிந்துள்ளது. சாகுபடி குறைந்ததால் விலை அதிகரித்து வருகிறது.சேலம் மாவட்டம், கொளத்தூர் என்றாலே காரம் மிகுந்த சம்பா மிளகாய்தான் நினைவுக்கு வரும். கொளத்தூரில் வசிப்பவர்கள் தங்களின் உறவினர்களை பார்க்க செல்லும்போது, சம்பா மிளகாயை கட்டாயம் கொண்டு செல்வது வழக்கம். அதேபோல், கொளத்தூரில் வசிப்பவர்களிடம் உறவினர்கள் விரும்பி கேட்பதும் சம்பா மிளகாய்தான். நாட்டு ரகமான சம்பா மிளகாய் காரம், மணம் மற்றும் நிறம் மிகுந்தது. இந்த மிளகாய் பொடியில் செயற்கை வண்ணம் கலக்கவேண்டிய அவசியமில்லை. கொளத்தூர் மிளகாய்க்கு தமிழகம் முழுவதும் எப்போதும் நல்ல கிராக்கி உள்ளது ஆடிப்பட்டத்தில் விதைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும். 150 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை விளைச்சலை தரும். கடந்த ஆண்டு பெய்த மிக அதிக மழை மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக, மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் சம்பா மிளகாய் பயிரிடும் பரப்பளவு குறைந்து போனது. விவசாயிகள் வாழை, தர்பூசணி போன்ற மாற்று பயிர்களை பயிரிடத்தொடங்கி உள்ளனர்.

கொளத்தூர் வட்டாரத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை, சம்பா மிளகாய் சாகுபடி பிரதானமாக இருந்து வந்தது. ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வந்தது. அப்போது ஆண்டுக்கு 15 ஆயிரம் டன் மிளகாய் உற்பத்தி இருந்து வந்தது. தற்போது பருவநிலை மாற்றம் நோய் தாக்குதல் காரணமாக, சம்பா மிளகாய் சாகுபடி 50 சதவிகிதமாக சரிந்து போனது. தற்போது ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டு இனமான சம்பா மிளகாய் சாகுபடி சரிந்து வருவதால், தற்போது சம்பா மிளகாய்க்கு கிராக்கி ஏற்பட்டு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.கொளத்தூர் வட்டாரத்தில் பங்காரம், புல்லட் மற்றும் யூஎஸ்-344 என்ற ஹைபிரிட் வகைகள், தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த பயிர்களின் காலம் 90 நாள் முதல் 120 நாட்கள் வரையிலானது. இந்த மிளகாயை பச்சை மிளகாயாக பறித்து, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இவ்வகை மிளகாய்ச்செடிகள் ஹெக்டேருக்கு 25 டன் வரை மகசூலை கொடுக்கிறது. விவசாயிகளும் உடனடியாக விற்பனை செய்து, லாபம் ஈட்டலாம். இரட்டிப்பு லாபம் என்பதால், விவசாயிகள் கலப்பின மிளகாய் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று கொளத்தூர் வாரச்சந்தையில், மிளகாய் வற்றல் கிலோ ரூ.330 முதல் ரூ.340 வரை விற்பனையானது. கொளத்தூர் சம்பா மிளகாய் பயிரிடும் ஆர்வத்தை விவசாயிகளிடம் அதிகரிக்க, அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். பருவநிலைக்கு ஏற்ப அதிக மகசூலை கொடுக்கும் வகையில், பல புதிய முறைகளை கண்டுபிடித்தால் மட்டுமே நாட்டுரகமான சம்பா மிளகாயை காக்க முடியும். நடப்பு ஆண்டில், கொளத்தூர் வட்டாரத்தில் மிளகாய் பயிரிடும் பரப்பு 1,260 ஏக்கராக குறைந்து போனது. விவசாயிகளுக்கு குறைந்த காலத்தில் இரட்டிப்பு விளைச்சல் மற்றும் லாபத்தை தருவதால், கலப்பின ரகங்களை விவசாயிகள் பயிரிடுவதாகவும், இப்பகுதியில் பயிராகும் கதலி வாழைக்கு நல்ல விலை கிடைப்பதாலும், விவசாயிகள் வாழைக்கு மாறுவதாகவும், கொளத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வினோதினி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.