ஓபிஎஸ் தாயார் மறைவு: திமுக சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி அஞ்சலி!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவை முன்னிட்டு பொதுமக்களும் அரசியல் கட்சி நிர்வாகிகளும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் கூறினர்.

அதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை. ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து பயணித்த முன்னாள் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்த வரவில்லை, இரங்கலும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் திமுகவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆண்டிபட்டி
திமுக
சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த அமைச்சர்
ஐ.பெரியசாமி
ஆறுதல் தெரிவித்தார்.

திமுக சார்பாக நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அதன் அமைப்புச் செயலாளர் மகேந்திரன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.