
காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறக் கூடிய இம்மாநாட்டில், காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி உரையாற்றினார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி சீரழித்து வருகிறது. ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக, நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது. இது காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு சவாலான காலமாகும்.
எனது பயணம் பாரத் ஜோடோ யாத்திரையுடன் முடிவடைந்துவிட்டது. 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றிகளும், மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையும் எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தன.
இந்நிலையில்,சோனியா காந்தி அறிவிப்பானது, காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு இனி வர மாட்டேன் என்பதை உணர்த்துகிறாரா? அல்லது முழுமையாக அரசியலில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறக் கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.