ஊட்டி: கோடை சீசன் நெருங்கிய நிலையில் ஊட்டியில் குதிரை பந்தய மைதானத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு தோறும் கோடை சீசனின் போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக, ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி ஆகியன நடத்தப்படுகிறது. இதுதவிர குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஊட்டியில் கோடை சீசனின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி துவங்கி ஜூன் மாதம் வரை ஒன்றரை மாதங்களுக்கு மேல் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் பல்வேறு போட்டிகள் அடங்கிய குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக பெங்களூர், சென்னை, பூனா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன. நாள் தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். குறிப்பாக, மே மாதம் 1ம் தேதி மற்றும் மலர் கண்காட்சி நடக்கும் நாளில் சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், குதிரை பந்தயத்தினை ஆர்வமுடன் கண்டுகளித்து செல்வது வழக்கம். இதனால், சுற்றுலா பயணிகளை கவருவதற்காக சில போட்டிகளும் இங்கு நடத்தப்படுகிறது.
ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் துவங்கும் குதிரை பந்தயத்திற்காக பிப்ரவரி மாதம் 2வது வாரத்திற்கு மேல் குதிரைகள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். குதிரை பந்தயம் துவங்க ஒன்றை மாதமே உள்ள நிலையில், இந்த மைதானத்தை (ஓடுதளம்) தயார் செய்யும் பணி, மைதானம் முழுவதும் உள்ள கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகள் துவக்கப்பட்டள்ளது. மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல ஏற்றவாறு சாலைகள் அமைக்கும் பணிகள், குதிரைகள் தங்குவதற்கு கொட்டகைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.