காஞ்சிபுரம்: வடமாநில தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாக சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிஐடியு தொழிற்சங்க மாநிலக் குழுக் கூட்டம் கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய தொழிலாளர்கள் நிலை குறித்தும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிறைவு நாளான நேற்று மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை பெரும் பணக்காரர்களுக்கே சாதகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. அரசுத் துறைகளில் தனியார் மயத்தை புகுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதானியின் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினால் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெயரை ஏன் உங்கள் குடும்ப பெயராக வைக்க வில்லை என்று சுதந்திரப் போராட்ட வீரரை இகழ்ந்து பேசுகிறார். சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களை ஒரு பிரதமர் கொச்சைப் படுத்துவது மோசமான செயல்.
தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை. இதற்காக போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒரு தலைப் பட்சமாக செயல்படுகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்தியா முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அதற்கு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலும் விதி விலக்கல்ல. வடமாநில தொழிலாளர்கள் வருகையால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறுவது தவறானது.
அவர்களை வேலைக்கு அழைத்து வருவதே தமிழர்கள்தான். அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்களுக்கு உணவும், சிறு ஊதியமும் கொடுத்துவிட்டு வேலை வாங்குகின்றனர். மற்ற தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதானி போன்றார் ஆயிரக்கணக்கான ஏக்கர் இடங்களை குவிக்கின்றனர்.
ஆனால் இங்கு உழைக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக சிலர் பேசுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்குச் சென்று பணி செய்கின்றனர். பரந்தூர் விமான நிலையத்தை பொறுத்தவரை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. இந்தத் திட்டத்தை அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
இதற்காக எங்கள் விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது. இவ்வாறு கூறினார். இந்த சந்திப்பின்போது மாநில துணைப் பொதுச் செயலர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.