தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், போவன்பல்லியில் வசித்து வந்தவர் விஷால் (24). இவர், செகந்திராபாத் ஆசிப் நகரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் விஷால், கடந்த 23-ம் தேதி அன்று இரவு 8 மணிக்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்தார்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அந்த வீடியோவில், விஷால் புஷ்-அப்ஸ் மற்றும் ஸ்ட்ரெச் செய்த பிறகு கடுமையாக இருமல் வந்துள்ளது. இருமிக்கொண்டிருந்த விஷால் திடீரென்று தரையில் விழுந்துவிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே விஷால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் விஷால் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அறிவித்தனர். இந்த சம்பவம் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 70 வயதுக்கு பிறகு வரக்கூடிய மாரடைப்பு தற்போது, இளம் தலைமுறையினருக்கு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய மாதங்களில் பதிவாகியுள்ள திடீர் மாரடைப்பு மரணத்தின் மற்றொரு நிகழ்வு இதுவாகும். தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் (NCBI) கருத்துப்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.