மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கடந்து டிசம்பர் மாதம் 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்டமாக சூப்பர் சரவணா ஸ்டோர் திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் முழுமையாக கட்டுமான பணி நிறைவடாத நிலையில் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மதியம் சூப்பர் சரவணா ஸ்டோரின் 10வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
சரவணா ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாங்கும் உணவுகளை உண்பதற்காக பத்தாவது மாடியில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அமைந்துள்ள சமையலறை பகுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட சரவணா ஸ்டோர் ஊழியர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டுமானம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக விசாரிக்க முறையிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் தீ விபத்து தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள என அறிவித்துள்ளது.