வெற்றி பெற்றார் ஹேக்கானி ஜக்காலு!: நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பெண் எம்.எல்.ஏ. தேர்வு..!!

நாகாலாந்து: நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பெண் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமாபூர் – 3 தொகுதியில் என்டிபிபி கட்சி வேட்பாளர் ஹேக்கானி ஜக்காலு என்பவர் வெற்றி பெற்றார். நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பெண் ஒருவர் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் 4 பெண்கள் போட்டியிட்ட நிலையில் ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எல்ஜிபி வேட்பாளரை விட 1,536 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை 13 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால், ஒருமுறை கூட பெண் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததில்லை. இந்நிலையில், நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையை ஜக்காலு பெற்றுள்ளார். என்டிபிபி கட்சியின் மற்றொரு பெண் வேட்பாளரான சல்ஹூதுவோனுவோ க்ரூஸ், தான் போட்டியிட்ட மேற்கு அங்காமி தற்போது முன்னிலையில் உள்ளார். இவரும் வெற்றி பெறும் பட்சத்தில் நாகாலாந்து சட்டப்பேரவைக்குள் இரு பெண் எம்எல்ஏக்கள் முதல் முறையாக நுழைவார்கள்.

ஆட்சி அமைக்கும் பாஜக:

நாகாலாந்திலும் பாஜக ஆட்சி அமைகிறது. 60 தொகுதிகள் உள்ள நாகாலாந்தில் அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 27ம் தேதி 59 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.இந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 2 இடங்களிலும் நாகா மக்கள் முன்னணி கட்சி 1 இடங்களிலும் பிற கட்சிகள் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம் நாகாலாந்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது கருத்து கணிப்பில் சொன்னது போல உறுதியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.