மயிலாடுதுறை: விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வேளாண்மை தனிபட்ஜெட் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் அரியலூர் ஆகிய 6 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மயிலாடுதுறையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: வருகின்ற வேளாண்மைத்துறை தனிபட்ஜெட்டில் என்னென்ன புதிய திட்டங்களை கொண்டு வரலாம் என்பதற்காக 6 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே திண்டுக்கல்லில் 5 மாவட்ட விவசாயிகளிடமும், திருநெல்வேலியில் 5 மாவட்ட விவசாயிகளிடமும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. 3ம் தேதி (இன்று) செங்கல்பட்டில் 6 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகளிடம் பெறக்கூடிய கருத்துக்கள் முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். வரக்கூடிய வேளாண்மை தனி பட்ஜெட் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். முதல்வர் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
