சென்னை தலைமை காவல் கட்டுபாட்டு அறைக்கு நேற்று இரவு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள மதுபானக் கடையை குண்டு வீசி தாக்க போவதாக தெரிவித்து விட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி, கோவை போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த விதமான அடையாளமும் தெரியவில்லை. இதனால் அந்த தகவல் புரளி என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? அவர் எங்கிருந்து பேசினார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, அந்த செல்போன் சிக்னல் கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு சாலையில் காண்பித்தது.
அதன் படி போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த வழியாக சென்ற நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் தான் டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய கிடுக்குப்புடி விசாரணையில், அந்த நபர் விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பதும், அவர் குடிபோதையில் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு டாஸ்மாக் கடைக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.