புதுடெல்லி: இந்தியாவில் பாஜ தலைமையிலான அரசின் அநீதியை எதிர்த்து போராட ‘இன்சாப்‘ என்ற புதிய தளத்தை மாநிலங்களவை எம்பி கபில் சிபல் தொடங்கியுள்ளார். ஒன்றிய பாஜ அரசு பல்வேறு துறைகளிலும் தன் தலையீட்டின் மூலம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்த முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், விமர்சனம் செய்பவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் அடக்குமுறை ஏவிவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜ அரசின் கீழ் நாட்டில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து போரிட, மாநிலங்களவை எம்.பியும், வழக்கறிஞருமான கபில் சிபல் இன்சாப்(நீதி) என்ற தளத்தையும், இன்சாப் கி சிப்பாஹி(நீதியை நிலைநாட்டும் வீரர்கள்) என்ற புதிய இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “பாஜவின் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் எதிர்க்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பாஜவுக்கு எதிராக போராட வேண்டும். இது அரசியல் கட்சியல்ல. மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்டது” என்றார்.