பார்முலாக்களை புதுசு புதுசா கண்டுபிடிக்கணும் என்பதை, இந்த தேர்தலில் கத்துக்கிட்டீங்களா?| Speech, interview, report

தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:

ஈரோடு இடைத்தேர்தலில், எங்களுக்கு, ‘டிபாசிட்’போகும் என்று எதிர்பார்த்தனர். அடக்குமுறையை தாண்டி மக்கள், எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். ‘திருமங்கலம் பார்முலா’ பழையதாகி விட்டது; இனி, ‘ஈரோடு கிழக்கு பார்முலா’ தான். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி, அதிகார துஷ்பிரயோகம் செய்தது. பணத்தை செலவழித்து, தி.மு.க., போலியாக பெற்ற வெற்றி, லோக்சபா தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

தி.மு.க.,வுக்கு இணையா பணம் கொடுக்கிறது முக்கியம் இல்ல… ‘பார்முலா’க்களை புதுசு புதுசா கண்டுபிடிக்கணும் என்பதை, இந்த தேர்தலில் கத்துக்கிட்டீங்களா?

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேச்சு:

பெண்கள் முன்னேற இருக்கும், ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. அதுவும் பத்தோடு பதினொன்றாக நிற்காமல், என்னவாக வேண்டும் என்று, ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு எண்ணம் இருக்கும். முதலில் அது என்னவென்று, நீங்கள் தெரிந்து கொண்டு, அதை நோக்கி பயணிக்க, உழைக்கத் துவங்குங்கள்; உங்களால் முடியாதது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.

latest tamil news

இதே மாதிரி, ‘நம்மால் முடியாதது இந்த உலகத்தில் எதுவுமில்லை’ என்ற குருட்டு நம்பிக்கையில் தான், ‘நாங்க ஆட்சிக்கு வந்ததும், ‘நீட்’ தேர்வை எப்படி ரத்து செய்வது என்ற ரகசியம் எங்களுக்கு தெரியும்’னு அடிச்சி விட்டீங்களோ?

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்தது தான். தவறான முன்மாதிரி தேர்தலாக நடந்துள்ளது. இந்த வெற்றிக்கும், சட்டசபை தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 20 மாத ஆட்சியில், மக்கள் எந்த அளவிற்கு அதிருப்தியிலும், வேதனையிலும் உள்ளனர் என்பது, உளவுத்துறை வாயிலாக முதல்வருக்கு தெரியும்.

latest tamil news

அதெல்லாம் அவருக்கு தெரிஞ்சதால தான், அமைச்சர் படையை களம் இறக்கி, வாக்காளர்களை ‘டிசைன், டிசைனா’ வளைச்சு, வெற்றியை, ‘வாங்கி’ட்டாங்க!

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த முடிவாகவே, த.மா.கா., கருதுகிறது. ஆளும் கட்சியின் அதிகார பலம், ஆள்பலம், பணபலத்தை தாண்டி, தேர்தல் ஆணையத்தால் முறையாக செயல்பட முடியவில்லை. வரும் காலங்களில், முறையாக தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இவ்வளவு முறைகேடுகளை தாண்டி, 43 ஆயிரம்ஓட்டுகள் பெற்றுள்ளதை, அ.தி.மு.க.,வின் வெற்றியாகவே கருதுகிறோம்.

அ.தி.மு.க., வேட்பாளர் வாங்கிய, 43 ஆயிரம் ஓட்டுகள்ல,இவரது கட்சியின் ஓட்டுகள் எத்தனைன்னு சொல்லாம விட்டுட்டாரே!

தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி:

ஈரோடு இடைத்தேர்தலில், ‘கீழே விழுந்தாலும்மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பது போல, அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தாலும், ‘பணநாயகம் தான் வென்றது’ என, பேசி வருவது, ‘காமெடி’யாக உள்ளது. வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் பணம் வழங்கியதற்கு ஆதாரம் உள்ளது.

இவங்க ரெண்டு கட்சியும் பணம் கொடுத்த,’வீடியோ’ ஆதாரங்களைப் பார்த்து, தேர்தல் கமிஷனே திகைச்சு போய் நிற்குது… எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஆதாரம், சேதாரம் அவசியமா?

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:

இடைத்தேர்தலில், 400 கோடி ரூபாய்க்கு மேலாக செலவழித்து, வெற்றி பெற வேண்டிய அவல நிலையில் தி.மு.க., உள்ளது. ‘எடை போட்டு ஓட்டளிக்க வேண்டும்’ என, முதல்வர்ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அது, பரிசுப் பொருட்களின்எடை தான் என்பதை, இப்போது புரிந்து கொண்டோம்.

பாவம்… இவங்க தான், ‘லேட்டா’ புரிஞ்சிக்கிட்டாங்க… முதல்வர் சொன்னதை ஈரோடு வாக்காளர்கள், ‘கற்பூரம்’ மாதிரி ‘கப்’புன்னு புரிஞ்சிக்கிட்டு, கை சின்னத்தில் குத்தோ குத்துன்னு குத்திட்டாங்களே!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

முதல்வரே, மஹாபாரதத்தை முழுமையாக கற்றறியுங்கள். நெறி தவறி, நீதிக்கு புறம்பாக, தன் மக்களின் நலனுக்காக, நாட்டு நலனை உதாசீனப்படுத்திய, திருதராஷ்டிரன் குறித்து அறிந்து கொள்ளுங்கள்; திருத்திக் கொள்ளுங்கள். ராமாயணம், ஒருவர் எப்படி இருக்க வேண்டும்என்றும், மஹாபாரதம் ஒருவர் எப்படி இருக்கக் கூடாது என்றும் போதிக்கிறது. மஹாபாரதத்தை முழுமையாக படித்து, தெளிவு பெறுங்கள்.

latest tamil news

அறிக்கையில அவ்வளவு விளக்கமா சொல்ல முடியாது… பேசாம, முதல்வருக்கு பிறந்தநாள் பரிசா ராமாயணம், மஹாபாரதம்புத்தகங்களை, இவர் வழங்கி இருக்கலாம்!

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி:

வட மாநிலங்களில், காங்., – கம்யூ., கட்சிகள் காணாமல் போய் விட்டன. தமிழகத்தில், தி.மு.க., தான் இந்தக் கட்சிகளை தாங்குகிறது. ஈரோடு இடைத்தேர்தலில்,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்ததால், பணநாயகம் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெரிய அளவில் வெற்றி பெறும்.

மன்னர் புகழ்பாடும் புலவர்களைபோல, காங்., – கம்யூ., உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள்,முதல்வர் புகழ் பாடுவதற்கு சன்மானமாகவே, அவங்களை தி.மு.க., தாங்குகிறது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.