`சங்கடங்களைக் கடந்து பயணித்தேன்; மனவேதனையே மிச்சம்!'- அதிமுக-வில் இணைந்தார் பாஜக-வின் நிர்மல் குமார்

பாஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னால் முடிந்தவரை பல சங்கடங்களைக் கடந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பயணித்தேன்! உண்மையாக, நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து, இன்று நான் பா.ஜ.க-வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்.

அண்ணாமலை

பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், உண்மையாக, நேர்மையாக, கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவரை பணியாற்றினேன். இன்று விடைபெறுகிறேன். என்மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவுக்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க தலைமை தொண்டர்களையும், கட்சியையும், செருப்பாகப் பயன்படுத்தி, கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம், எதுவும் இல்லை.

அதையும் தாண்டி, தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி, இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் வேதனையடைந்ததுதான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது, தான்தோன்றித்தனம். இவற்றுடன் மனநலம் குன்றிய மனிதரைப் போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கிச் செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது.

நிர்மல் குமார்

2019-ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவிகிதம்கூட இல்லை. அதைப் பற்றி துளியும் கவலை இல்லாமல், மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த முயன்று என்னைப் போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஓர் அமைச்சருடன் கடுமையான சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீரவேசமாக பேசிவிட்டு, திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்…

மொத்தத்தில் திராவிடமாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவுக்கு, ஒரு 420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பா.ஜ.க-வுக்கு மட்டுமல்ல தமிழகத்தூக்கே மிகப்பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்களையும், கட்சியையும் ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை எப்படி நம்பி பயணிக்க முடியும்?” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.