"உக்ரைன்-ரஷியா போரை என்னால் மட்டும் தான் நிறுத்த முடியும்" – டிரம்ப் அதிரடி பேச்சு

வாஷிங்டன்,

ரஷியா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2022 பிப்ரவரி மாத இறுதியில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன.

இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷியா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் நாட்டிற்கு புதிதாக 2.5 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஆயுத உதவியாக 31 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

இந்த போர் முடிவுக்கு வராமல் தொடர்வது இரு நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா – உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். போரை தற்போதைய அமெரிக்க அரசு ஒழுங்காக கையாளவில்லை எனக் கூறிய டொனால்டு டிரம்ப், “நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற போரை நடத்த விட்டிருக்கமாட்டேன்.

போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறத? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷிய அதிபர் புதின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு 1 நாளுக்கு மேல் ஆகாது. 3ம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.