வட மாநிலத் தொழிலாளர் சர்ச்சையை திமுக, காங்கிரஸ் திட்டமிட்டு பரப்பி வருகின்றது என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ற்றம் சாட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு எஸ்சி சான்றிதழ் வழங்க கோரி, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 7 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறவர் மக்களுக்கு, நேரில் சென்று தனது ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆங்கிலேயேர் காலத்தில் குறவன் இன மக்களை அடக்கி வைக்க, குற்றப்பரம்பரை என பிரித்து வைத்தனர்.
இதன் காரணமாகவே அவர்களுக்கு இன்று வரை ஆட்சியாளர்கள் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர்கள் வீட்டிற்குச் சென்று சாப்பிடுவார். ஆனால், அவர்கள் சாப்பிடும் உணவை தான் இவர் சாப்பிடுகிறாரா?
சமூக நீதி பற்றி பேசும் இந்த அரசு, சான்றிதழ் வழங்கிவிட்டு பின் சமூக நீதிப்பற்றி பேச வேண்டும். 7 நாட்களாக போராடி வரும் இந்த குழந்தைகளை கூட அதிகாரிகள் திரும்பி பார்க்கவில்லை. துறைச்சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் வந்து அவர்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியர்களை சந்தித்த சீமானிடம் வடமாநில தொழிலார்கள் பிரச்னை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு அவர், “இந்த சர்ச்சையை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன’’ என்று குற்றம் சாட்டினார்.