மதுரையில் அதிமுகவினர் பலர் அண்ணாமலை முன்னணியில் பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணியில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பு அணி தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டார்.
தொடர்ந்து, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் திலீப் கண்ணன் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருடன் மேலும் சில பாஜக நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்தனர்.
கூட்டணி தர்மத்தை மீறி பாஜக நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இணைத்து வருவதாக பாஜகவினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் அவர்களுக்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் இன்று மாலை அதிமுகவினர் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர். மதுரை விமான நிலையம் வந்த அண்ணாமலை முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலர் தங்களை பாஜகவில் இணைந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவிக்கையில், “கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது. யார் விலகினாலும் வாழ்த்தி வழி அனுப்புவேன்.
நான் தலைவன், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பேன். நான் எதற்கும் கவலைபட போவதில்லை. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு” என்று மறைமுகமாக அதிமுகவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.