16 பேரின் நிலை?! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்! 

கடந்த 23ம் தேதி  பிரிட்டிஷ் இந்திய பெருங்கடலில் கைது  செய்யப்பட்ட 16 மீனவர்களை மீட்க, வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்த அவரின் கடித்ததில், “தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) 09.02.2023 அன்று பதிவு எண்.IND-TN-15-MM-3793-ல் “புனித மேரி” என்ற பெயர் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அம்மீனவர்கள் 23.02.2023 அன்று ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (BIOT) டியாகோ கார்சியா அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.

இப்பகுதி மீனவர்கள், மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில், இக்கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும்.

எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம், தூதரக வழிமுறைகள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சம்பவத்தினை எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவித்திட வேண்டும்”.

இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.