செங்கல்பட்டு அருகே எரிவாயுவை கொண்டு சென்ற டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எண்ணூரில் இருந்து மதுரை நோக்கி சென்றபோது டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவித்தனர்.
சென்னை எண்ணூரில் இருக்கக்கூடிய இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் இருந்து, சமையல் எரிவாயு திரவத்தை ஏற்றுக்கொண்டு மதுரையை நோக்கி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது.
மதுரை சேர்ந்த அசாருதீன் என்பவர் இந்த வாகனத்தை ஓட்டிச் சென்றார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அருகே இந்த லாரி வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த டேங்க் வழியே கேஸ் கசிவு ஏற்பட்டது.
இதனை அடுத்து லாரி ஓட்டுநர் வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு, தீயணைப்புத் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். மேலும் இந்திய ஆயில் நிறுவனத்திற்கும் தகவலை தெரிவித்தார்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள், டேங்கர் லாரி மீது தண்ணீரை பீச்சி அடித்து, தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெரும் அசம்பாவிதத்தை தீயணைப்பு துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அதே சமயத்தில் குறித்த நேரத்தில் லாரி ஓட்டுநர் செயல்பட்டதால் மிகப்பெரிய விபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.