நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் குழாய் கசிவின் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அம்மாவின் அரசு டெல்டா மாவட்ட வேளாண் பெருமக்களின் வளர்ச்சிக்காகவும், மீனவ மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.
நாகப்பட்டினம் மாவட்டம், நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சி.பி.சி.எல்) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள் மற்றும் கப்பல்கள் மூலமாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கப்பல்களுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் வகையில் நாகப்பட்டினம் நகரம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தின் கடற்கரை வழியாக குழாய்கள் நாகூர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டினச்சேரி மீனவ கிராமம் வழியாகச் செல்லும் குழாயில் கடந்த 2.3.2023 அன்று இரவு உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால், அதிலிருந்து வெளியேறும் வாயு மற்றும் துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.
அம்மா அரசில் நாகப்பட்டினம் மீனவர்களுக்காக ஆறுகாட்டுத்துறையில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் (பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது), வெள்ளப்பள்ளம் கிராமத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் (50 சதவீதம் முடிவடைந்துள்ளது), தரங்கம்பாடியில் திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி 148 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் என்று, அம்மாவின் அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவக்கப்பட்டன.
மேலும், நம்பியார் நகர் பகுதியில், அப்பகுதி மீனவர்களின் பங்களிப்புடன் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் எங்கள் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களின் நலனுக்காக, இந்த விடியா அரசு போல் வாய்ச் சவடால் அரசாக இல்லாமல், செயல்படும் அரசாக அம்மாவின் அரசு விளங்கியது. மேற்கண்ட பணிகளுக்குத் தேவையான நிதியினை அம்மாவின் அரசு ஒதுக்கீடு செய்து, தற்போது அப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
ஆனால், ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட திமுக, தனது 2021 தேர்தல் அறிக்கையில், 114-ஆவது வாக்குறுதியாக மீனவ சமுதாயத்தை, பழங்குடியினர் இனத்தில் சேர்ப்பதற்கும், அவர்களுக்குரிய அனைத்து சலுகைகளும் பெற்றுத் தரப்படும் என்றும், தேர்தல் அறிக்கை எண் 123-ல் மழைக்கால மற்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை, வெறும் வெற்று அறிக்கையாக வழங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் எண்ணெய் குழாய் உடைப்பு சம்பவத்தைக் கண்டித்து பட்டினச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இங்குள்ள குழாய்களை அகற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும், சென்னை பெட்ரோலிய கழகத்தின் குழாய்கள் இப்பகுதியில் இருக்கக்கூடாது என்றும், அதை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இம்மாதம் 2-ஆம் தேதி எண்ணெய் குழாய் உடைப்பினால் கச்சா எண்ணெய் கடலில் கலந்து ஏற்பட்ட பாதிப்பை இன்றுவரை (7.3.2023) சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சரோ, மீன்வளத் துறை அமைச்சரோ அல்லது மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளோ சென்று பார்வையிடவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
எது எதற்கோ வாய்ப் பந்தல் போட்டு வரும் இந்த நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியாளர்கள், வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாக களத்திற்கு அனுப்பி, போராட்டம் நடத்துபவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, எண்ணெய் நிறுவனங்களிடம் அவர்களது கருத்துகளை எடுத்துச் சொல்லி, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.