திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலாவுக்கு சுற்றுலா வந்த கோவையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பாராகிளைடிங்கில் செல்ல விரும்பினார். இதன்படி நேற்று மாலை 3.30 மணியளவில் இவர் பாராகிளைடிங்கில் புறப்பட்டார். அவருடன் ஒரு பயிற்சியாளரும் சென்றார். உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடற்கரையை ஒட்டி இருந்த 100 அடி உயரமுள்ள ஹைமாஸ்ட் மின் கம்பத்தில் அதன் சிறகுப் பகுதி சிக்கியது. உடனடியாக இருவரும் மின்கம்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு அலறினர். சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் அங்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து வர்க்கலா போலீசுக்கும், தீயணைப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விரைந்து சென்று அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். மின் கம்பத்திற்கு கீழே பெரிய வலை விரிக்கப்பட்டது. அருகிலுள்ள ஓட்டல்களில் இருந்து மெத்தைகளும் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையே வர்க்கலா நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அவர்களின் உதவியுடன் விளக்குத் தூணின் உயரம் 50 அடியாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர் அங்கிருந்து கீழே குதிக்குமாறு தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் அவர்களிடம் கூறினர். இதையடுத்து இருவரும் சரியாக வலையில் குதித்தனர்.
உடனடியாக அவர்களை மீட்ட போலீசார் இருவரையும் வர்க்கலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.