புதுச்சேரி: கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவுக்குறித்து வரும் 15ல் புதுச்சேரியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது. கடந்த 2018ல் எதிர்ப்பு தெரிவித்த வரைபடத்தையே இறுதி செய்துள்ளதால் இது சட்டவிரோதம் என தெரிவித்து ரத்து செய்ய வலியுறுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு வரும் 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் 2019ம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல(CRZ) அறிவிப்பானை வெளியிடப்பட்டது. அதன்படி கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் புதுச்சேரி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி புதுச்சேரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இறுதி செய்யப்படவுள்ளது.
இதற்கு சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிபிஎம் மாநிலச்செயலர் ராஜாங்கம் இதுதொடர்பாக கூறியதாவது: கருத்துக்கேட்பு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் வரைவு திட்டத்தின் அடிப்படையிலேயே புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆகையால் மாநில அரசு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணைக்கு விரோதமாக கடற்கரை சார்ந்து வாழும் மீனவ மக்களின் வாழ்வுரிமை மற்றும் கடற்கரை, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில் முதலீடுகள் மற்றும் சுற்றுலா திட்டங்களை மையப்படுத்தியே வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல(CRZ) அறிவிப்பானையில் கடற்கரை பகுதிகள் 4 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக பவளப்பாறைகள், அலையாத்தி காடுகள், கழிமுகங்கள், மணல் குன்றுகள், பாரம்பரிய மீனவர்களின் வாழ்விடங்கள், மீனவர்கள் தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும் இவ்விடங்களில் வளர்ச்சி என்ற பெயரில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் செயல்படுத்த தடை செய்யப்படுகிறது.
குறிப்பாககடலோர மக்களின் குடியிருப்புகள், பாதைகள், பள்ளிக்கூடம், கோயில்கள், விளையாட்டு மைதானம், மீன் இறக்கும் தளம், மீன் காய வைக்கும் இடம், படகுகள் நிறுத்தும் இடம், வலைகள் பழுது பார்க்கும் இடம், இவைகள் அனைத்தும் வரைபடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் புதுவை அரசு வெளியிட்டுள்ள வரைபடத்தில் பதிவு செய்யப்படவில்லை. 2019 அறிவிப்பு ஆணைக்கு விரோதமாக கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் சுற்றுலா வளர்ச்சிக்கான இடங்கள் வரைபடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடல் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்று சூழலையும் பாழ்படுத்தும் அரசின் நயவஞ்சக செயல்திட்டத்தை எதிர்க்கிறோம். 2018ல் இது போன்ற கருத்து கேட்பு கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது அப்போது இதே குளறுபடிகளை மீனவ சமுதாய மக்கள், அரசியல் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் சுட்டி காட்டினார்கள். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் குறைகளை சரி செய்து சட்டத்திற்கு உட்பட்டு புதிய வரைபடம் தயாரித்து மீண்டும் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் நெறியற்ற முறையில் முதலில் வெளியிட்ட வரைபடத்தையே இறுதிப்படுத்தி உள்ளார்கள். தற்போதும் அதே பாணியில் கடலோர மண்டல மேலாண்மை திட்டம் வரைபடத்தை நிறைவேற்றிட புதுச்சேரி அரசு துடிக்கிறது. புதுச்சேரி சுற்றுச்சூழல் துறையால் சட்ட விதிகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்டுள்ள கடலோர மண்டல மேலாண்மை வரைபடத்தை ரத்து செய்திட வேண்டும். மீனவ மக்களின் கருத்தரிந்து புதிய வரைபடத்தை தயாரிக்க முன்வர வேண்டும்.15 .03. 2023 நடத்த உள்ள கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.