சென்னை: கப்பல் கேப்டனை ஏமாற்றிய தம்பதி; கடன் பத்திரங்களைக் கொடுத்து நூதன மோசடி!

சென்னை மணிமங்கலம், கீழபடப்பை, விஷ்ணு நகரைச் சேர்ந்தவர் முகமது அஷ்ரஃப் (61). இவர் 4.2.23-ம் தேதி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறேன். சென்னை மதுரவாயலைச் சேர்ந்த யாஸ்மின் பானு, அவரின் கணவர் சாதிக் ஆகியோரும் நானும் குடும்ப நண்பர்கள். அவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகின்றனர். அதனால் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் 50 சதவிகிதம் தருவதாக என்னிடம் இருவரும் அடிக்கடி ஆசைவார்த்தை கூறிவந்தனர். அதை நம்பி 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நானும் இரண்டு கோடியே இருபத்தாறு லட்சம் ரூபாயை வங்கிக் கணக்குகள் மூலமாகவும், ரொக்கமாகவும் அவர்களிடம் கொடுத்தேன்.

கேப்ட்ன் அஷ்ரஃப்

நான் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்ததால், நிலங்களை அவர்கள் இருவரின் பெயரிலேயே வாங்கிக்கொண்டனர். பின்னர் அவற்றை விற்று லாபத்தைத் தருவதாக எனக்கு உறுதியளித்திருந்தனர். அதற்கு நம்பிக்கை அடிப்படையில் நான் சம்மதித்தேன். மேலும், சாதிக்கும் யாஸ்மின் பானுவும் கார் வாங்கி வாடகைக்கு விட்டால் அதிலும் லாபம் கிடைக்கும் என என்னிடம் தெரிவித்தனர். அதை நம்பி பத்து லட்சம் ரூபாய்க்கு கார் ஒன்றை என் பெயரில் வாங்கி அவர்களிடம் கொடுத்தேன். அந்த காரை சாதிக், யாஸ்மின் பானு ஆகியோர் பயன்படுத்திவருகின்றனர். இந்தச் சூழலில், நான் கொடுத்த பணத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யப்பட்டதற்கான லாபத்தை சாதிக்கிடமும், அவரின் மனைவி யாஸ்மின் பானுவிடமும் கேட்டேன். ஆனால், அவர்கள் இருவரும் எனக்குச் சரியான பதில் சொல்லவில்லை.

2021, அக்டோபர் மாதம் வெளிநாட்டிலிருந்து நான் சென்னைக்கு வந்தபோது யாஸ்மின் பானு, சாதிக் ஆகியோரிடம் லாபத்தைக் கேட்டேன். ஆனால், அவர்கள் இருவரின் நடவடிக்கை மற்றும் பேச்சுகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. அதனால் அவர்களிடம் நான் முதலீடு செய்த பணத்தையும், லாபத்தையும் திரும்பத் தரும்படி கேட்டேன். அதற்கு அவர்கள், `எங்கள்மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கூறி ஓராண்டுக்குள் பணத்தை என்னிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர். மேலும், அதற்காக உறுதிப்பத்திரம் எழுதி தந்துவிடுகிறேன் என்று கூறி, அவர்கள் எனக்குத் தரவேண்டிய 2.26 கோடி ரூபாய்க்கு நான்கு கடன் ஒப்பந்தப் பத்திரங்களில் 1.2 கோடி ரூபாய் என்று மட்டும் எழுதிக் கொடுத்தனர். நான் வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதால் மீதமுள்ள தொகைக்கான கடன் பத்திரத்தை இருவரிடமும் வாங்கவில்லை.

சாதிக்

இந்த நிலையில் அவர்களுக்கு நான் வாங்கிக் கொடுத்த காரை திரும்பக் கேட்டேன். அதனால் காரை மணிமங்கலத்திலுள்ள என்னுடைய வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இந்தச் சமயத்தில் அடிக்கடி நான் வெளிநாட்டில் இருப்பதால் காரை விற்க டி.ஓ படிவத்தில் கையெழுத்து போட்டு காரில் வைத்திருந்தேன். அப்போது சாதிக், யாஸ்மின் பானு ஆகியோர் என்னிடம் காரை பயன்படுத்திக்கொள்வதாகக் கூறிக் கெஞ்சினர். அதனால் அவர்கள் இருவர்மீதும் இரக்கப்பட்டு காரைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தேன். 2022, ஆகஸ்ட் மாதம் நான் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தபோது பணம் மற்றும் காரை சாதிக், யாஸ்மின் ஆகியோரிடம் திரும்பக் கேட்டேன்.

ஆனால் அவர்கள் இருவரும் பணத்தைத் தர முடியாது என்று கூறியதோடு, `கூலிப் படையை ஏவிக் கொலைசெய்துவிடுவோம்’ என எனக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், சாதிக்கும் யாஸ்மின் பானுவும் என்னிடம் கொடுத்த கடன் பத்திரங்களின் உண்மைத் தன்மையை அறிய சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட கரூவூல அலுவலகத்துக்கு ஆர்.டி.ஐ மூலம் விவரம் கேட்டேன். அப்போது அவை போலி எனத் தெரியவந்தது. மேலும், காரையும் அவர்கள் பெயருக்கு மாற்றியதும் தெரியவந்தது. எனவே, என்னை ஏமாற்றிய கணவன், மனைவிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு எனது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் எட்டு பிரிவுகளின்கீழ் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். தங்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டதும் சாதிக், யாஸ்மின் பானு இருவரும் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.

முதல் தகவல் அறிக்கை

இது குறித்து தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு, “முகமது அஷ்ரஃப் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் கடன் பத்திரங்களில் மோசடி நடந்திருப்பதாக முகமது அஷ்ரஃப் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையிலும் விசாரணை நடக்கிறது” என்றனர்.

சாதிக், யாஸ்மின் பானு ஆகியோரின் விளக்கம் பெற அவர்களைத் தொடர்புகொண்டபோது, இருவரின் செல்போன் நம்பர்களும் ஸ்விட்ச் ஆஃப் என பதில் வந்தது. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.