வதந்தி பரப்புகிறார்கள் யாரும் நம்ப வேண்டாம்: வடமாநில தொழிலாளர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நாகர்கோவில்: ‘திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள், யாரும் நம்ப வேண்டாம்’ என்று வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
நாகர்கோவிலில் மாநகராட்சி புதிய கட்டிடம், கலைஞர் சிலை திறப்புவிழா ஆகியவற்றில் கலந்துகொண்டு தூத்துக்குடி விமான நிலையம் திரும்பிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்ட எல்லையில் காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கையுறை (கிளவுஸ்) தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அந்த தனியார் நிறுவனத்தில்  சுமார் 450 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் 30 பேர் பெண்கள்.

அந்த தொழிலாளர்களிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘நீங்கள் எத்தனை ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருகிறீர்கள், பணிச்சூழல் எப்படி இருக்கிறது, இங்குள்ள மக்கள் உங்களுடன் நல்ல முறையில் பழகுகிறார்களா, உங்களுக்கு இங்கு ஏதாவது இடர்பாடுகள் இருக்கிறதா’ என்று கேட்டார். அதற்கு தொழிலாளர்கள், சிலர் ஆறு ஆண்டுகளாகவும், பலர் ஓராண்டு முதல் இரண்டாண்டு காலமாக இங்கு பணிபுரிந்து வருகிறோம். சிலர் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்கள், தங்களது பணிச்சூழல் மிகவும் நல்ல முறையில் இருக்கிறது. நிறுவனத்தில் தரமான உணவு, தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இங்குள்ள மக்கள் தங்களுடன் சகோதரத்துவடன் பழகுகிறார்கள். தங்களுக்கு இங்கு எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல், சொந்த ஊரில் இருப்பது போலவே பாதுகாப்பாக வாழ்வதாகவும் தெரிவித்தார்கள். மேலும், அத்தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருவதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தொழிலாளர்களுடன் உரையாடியபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘நீங்கள் எந்தவித வதந்திகளையும் நம்ப வேண்டாம். தமிழ்நாடு அரசு அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழலை அளித்து வருகிறது’ என்று தெரிவித்தார்.  பின்னர் பெண் தொழிலாளர்கள் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

* ‘எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய விபரம் வருமாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்? பெண் தொழிலாளி: ஜார்க்கண்ட்.
முதல்வர்: தமிழ் தெரியுமா? தொழிலாளி: கொஞ்சம் கொஞ்சம் தெரியும். முதல்வர்: நீங்கள் சவுகரியமாக இங்கு இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லையே? எத்தனை வருடமாக வேலை பார்க்கிறீர்கள், குடும்பம் எல்லாம் ஊரில்தான் உள்ளதா? தொழிலாளி: 2 வருடமாக வேலை பார்க்கிறோம், குடும்பம் ஊரில் உள்ளது. நாங்கள் நன்றாக இருக்கிறோம்.
முதல்வர்: சாப்பிடுதல், தங்கும் வசதி எல்லாம் இங்கு உள்ளதா? தொழிலாளி: சிறப்பாக உள்ளது. மற்றொரு தொழிலாளியிடம்….முதல்வர்: நீங்கள் எங்கே இருந்து வந்துள்ளீர்கள்? எத்தனை வருடமாக வேலை பார்க்கிறீர்கள், இங்கு போதிய வசதிகள் உள்ளதா? தொழிலாளி:  ஜார்க்கண்ட், 2 வருடமாக வேலை பார்க்கிறோம். திருப்பூரில் பிரச்னை நடந்ததாக  கூறினர்.

அதனால் பயந்தோம், இங்கு பிரச்னை ஒன்றும் இல்லை. முதல்வர்:  திருப்பூரில் பிரச்னை ஒன்றும் இல்லை, சோஷியல் மீடியாவில் ரூமரை கிளப்பி  விடுகிறார்கள், பிளான் பண்ணி வதந்தியை கிளப்பி விடுகிறார்கள், நீங்கள் நம்ப  வேண்டாம். எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சோஷியல்  மீடியாவில் ரூமர்ஸ் வருகிறது, அதனை பார்த்து நீங்கள் பயந்தீர்களா? நம்ப  வேண்டாம், தைரியமாக இருங்கள். தொழிலாளர்கள்: பயப்படவில்லை, ரொம்ப நன்றி சார். இவ்வாறு கலந்துரையாடல் நடந்தது.  தொடர்ந்து, குழுவாக இருந்த தொழிலாளர்களிடம்… முதல்வர்: நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்? தொழிலாளர்கள்: நாங்கள் ஆரல்வாய்மொழி, பணக்குடியில் இருந்து வருகிறோம். 16 ஆண்டுகளாக வேலை பார்க்கிறோம். எங்க கம்பெனிக்கு நீங்கள் வந்து பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் சார்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.