கோஹிமா/ ஷில்லாங்: நாகாலாந்து முதல்வராக நெய்பியூ ரியோ, மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா நேற்று பதவியேற்றனர். இருவிழாக்களிலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றனர்.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவில் கடந்த பிப்.16-ம்தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் கடந்த பிப்.27-ம்தேதியும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. 3 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டன.
நாகாலாந்தின் 60 தொகுதிகளில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)25, கூட்டணி கட்சியான பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது.
இந்நிலையில், தலைநகர் கோஹிமாவில் உள்ள பண்பாட்டு மையத்தில் நேற்றுபாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. நாகாலாந்து முதல்வராக 5-வது முறையாக என்டிபிபி மூத்த தலைவர் நெய்பியூ ரியோ (72) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல்வர்களாக என்டிபிபி மூத்த தலைவர் ஜெலியாங், பாஜக மூத்த தலைவர் யான்தன்கோ பேடன் பொறுப்பேற்றனர். என்டிபிபி கட்சியில் 5 பேர், பாஜகவில் 4 பேர்அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளே இல்லை: கூட்டணியில் இல்லாத தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தளம் (ராம்விலாஸ்), இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், நாகாலாந்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
ஷில்லாங்கில் பதவியேற்பு: மேகாலயாவில் தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் தேசிய மக்கள் கட்சிக்கு 26, ஐக்கிய ஜனநாயக கட்சிக்கு 11, பாஜகவுக்கு 2 இடங்கள் கிடைத்தன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தேர்தலுக்கு பிறகு இக்கட்சிகள் மீண்டும் கூட்டணி சேர்ந்தன. தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மாவுக்கு 45 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில், தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்வராக 2-வது முறையாக கான்ராட் சங்மா (46) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தேசிய மக்கள் கட்சியின் பிரஸ்டோன், சினிய பலாங் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, சிக்கிம் முதல்வர் தமாங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திரிபுராவில் இன்று விழா: திரிபுராவின் 60 தொகுதிகளில் ஆளும் பாஜக 32-ல் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. தலைநகர் அகர்தலாவில் இன்று நடக்கும் விழாவில் 2-வது முறையாக மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.