கொச்சி, கேரளாவில் மிகப்பெரிய குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு ஐந்து நாட்களாகியும், அதை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
கேரளாவின் கொச்சியில் உள்ள பிரம்மபுரத்தில், 16 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது.
கடந்த 2008ல் துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில், நாள்தோறும் ஒரு லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இவற்றில், 1 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்கு எடுக்கப்படுவதாகவும், மீதமுள்ள 99 சதவீத கழிவுகள் இங்கேயே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி, இந்தக் குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக பல பகுதிகளுக்கும் தீ பரவியதை அடுத்து, குப்பைக் கிடங்கின் பல இடங்கள் எரியத் துவங்கின.
எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஐந்து நாட்களுக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான பகுதியில் தீ அணைக்கப்பட்டு வரும் சூழலில், இந்த விபத்தால் ஏற்பட்ட புகை மண்டலம், சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது. மயக்கம், வாந்தி, தலைச்சுற்றல், இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இப்பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.
பிரம்மபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள டாக்டர்கள் குழுவினர், வீடு வீடாகச் சென்று பரிசோதனைகள் செய்து வருகின்றனர்.
தீயை முற்றிலும் அணைக்க உரிய நடவடிக்கை எடுத்து வரும் கேரள அரசு, புகை மண்டலத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்