திருவனந்தபுரம்: கேரள விவசாயத்துறை அமைச்சராக இருப்பவர் பிரசாத். இவரது சொந்த ஊர் ஆலப்புழா அருகே உள்ள நூரநாடு ஆகும். இங்கு அவருக்கு சொந்தமாக ஒரு வீடும் உள்ளது. அமைச்சரான பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு இல்லத்தில் குடியேறினார். ஆகவே சொந்த வீட்டில் தற்போது வேறு யாரும் இல்லை. இந்த வீட்டுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை வரும் மின் கட்டணத்தை அமைச்சர் பிரசாத் ஆன்லைன் மூலம் செலுத்துவது வழக்கம். கடந்த பிப்ரவரி மாத கட்டணமான ரூ.490ஐ வழக்கம்போல ஆன்லைனில் கட்டினார். தொடர்ந்து அமைச்சர் பிரசாத் நேற்று தனது வீட்டுக்கு செல்ல தீர்மானித்திருந்தார்.
முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் அஜய்கோஷ், அமைச்சரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனே அவர் அமைச்சர் பிரசாத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அமைச்சர் பிரசாத் கேரள மின்வாரிய உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். உடனே மின் இணைப்பு வழங்கப்பட்டது. இது குறித்து கேரள மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து நூரநாடு மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, கட்டணத்தை கட்டிய விவரம் தங்களுக்கு தெரியாது என்றும், அதனால் தான் மின் இணைப்பை துண்டித்ததாகவும் கூறினர்.